தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா துவக்கம்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா துவக்கம்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா துவக்கம்
ADDED : ஜூலை 27, 2011 12:47 AM

தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக தென்தமிழகத்தில் சிறப்பு பெற்று விளங்கும் இவ்வாலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ல் துவங்கி ஆக.,5 வரை 10 நாட்கள் நடக்கும். இதன் 429வது ஆண்டுத்திருவிழா நேற்று துவங்கியது.சிறப்பு திருப்பலிக்குப்பின் காலை 8.50 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் ஆலயத்திற்கு எதிரே அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது, உலக சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பழைய துறைமுகத்திலிருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது. ஆலய பங்குத்தந்தை வில்லியம் சந்தானம், நிர்வாகிகள், மறைமாவட்ட முதன்மைகுரு ஆண்ட்ரூ டீரோஸ், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டனர். இதில் ஜாதி,மத வேறுபாடின்றி ஏராளமானோர் பங்கேற்று பனிமய மாதாவை வழிபட்டது இந்த பேராலயத்தின் சிறப்பம்சமாகும். பக்தர்கள் காணிக்கையாக கொண்டுவந்த பால்,பழங்களை கொடியேற்றத்திற்குப்பின் அங்கிருந்தவர்களுக்கு வழங்கினர். தமிழகம் மட்டுமின்றி இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவரும் பங்கேற்றனர். மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டது. விழாநாட்களில் தினமும் ஜெபம், சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான பனிமய மாதாவின் திருவுருவ பவனி ஆக.,5ம் தேதி இரவு நடக்கிறது.


