மந்திரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு புகார் : அ.தி.மு.க., உட்கட்சி பூசலே காரணம்
மந்திரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு புகார் : அ.தி.மு.க., உட்கட்சி பூசலே காரணம்
மந்திரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு புகார் : அ.தி.மு.க., உட்கட்சி பூசலே காரணம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க.,வில் நிலவிய உட்கட்சி பூசல் காரணத்தாலேயே, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது திட்டமிட்டு, அவதூறாக நில மோசடி புகார் கொடுக்கப்பட்டிருப்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது, தி.மு.க.,வினரின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பணிபுரிந்த இவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் அதிக ஓட்டுகளை பெற்று, கட்சியின் நம்பிக்கைக்கு உரியவரானார்; ஓட்டுகளை பெற்றுக் கொடுத்தார்.
கட்சிப் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டதால், அக்ரி கிருஷ்ணமூர்த்தி தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றவுடன், உணவுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் வணிக வரித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவரது எதிர் கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலர் முரளிமோகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், நகர பேரவை செயலர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர், அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராகச் செயல்பட்டு, அவரது மாவட்ட செயலர் பதவி மற்றும் அமைச்சர் பதவியை பறிக்க திட்டமிட்டனர்.
அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக பொய்யான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில், எதிர் கோஷ்டியினர் ஈடுபட்டனர். அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதியும், வேங்கிக்கால் பஞ்சாயத்து துணைத் தலைவருமான மூர்த்தி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர். இவர், கடந்த தி.மு.க., ஆட்சியில் தி.மு.க.,வினரின் துணையோடு டெண்டர் எடுத்து, டாஸ்மாக் கடைக்கு சரக்குகளை லாரியில் ஏற்றிச் செல்லும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
தற்போது, முறைப்படி மீண்டும் டெண்டர் விடப்பட்டதில் அந்த டெண்டர் மூர்த்திக்கு கிடைக்கவில்லை. இதனால் மூர்த்தி விரக்தி அடைந்தார். அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் இது குறித்து முறையிட்டபோது, 'அதிகாரிகள் சட்டப்படி என்ன செய்கின்றனரோ அதன்படி தான் நான் செயல்பட முடியும். இதில், நான் எதுவும் செய்ய முடியாது' எனக் கூறி விட்டார். இதனால், மூர்த்தி, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது ஆத்திரமடைந்தார்.
மூர்த்தியிடம் இருந்து, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நிலம் வாங்கியிருந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி, நிலத்தை மிரட்டி அபகரித்துக் கொண்டதாக திடீரென போலீசில் புகார் கொடுத்தார். புகார் குறித்து கட்சித் தலைமை, அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் விசாரணை நடத்தியது. விசாரணையில், கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி அன்று, மூர்த்தி சொந்த வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடத்தினார்.
கிரகப் பிரவேச விழா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது தெரிய வந்துள்ளது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மூர்த்தியை மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டிருந்தால், எப்படி மூர்த்தி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொண்டு விழா நடத்தியிருக்க முடியும். எனவே, மூர்த்தி திட்டமிட்டு பொய் புகார் கொடுத்தது தெரிந்தது.
பொய் புகார் குறித்து விசாரணையில் தெரிந்ததை தொடர்ந்து, அமைச்சர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற, பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். மூர்த்தி நேற்று புகார் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். மூர்த்தியிடம் போலீசார் முழுமையாக விசாரணை நடத்தினால், யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த பொய்யான புகார் கடிதம் கொடுக்கப்பட்டது என்பது தலைமைக்கு தெரியவரும் என்றும் அ.தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.