பழநி வனப்பகுதியில் நக்சல்கள் : தேடுதல் வேட்டை மும்முரம்
பழநி வனப்பகுதியில் நக்சல்கள் : தேடுதல் வேட்டை மும்முரம்
பழநி வனப்பகுதியில் நக்சல்கள் : தேடுதல் வேட்டை மும்முரம்
ADDED : ஜூலை 13, 2011 01:29 AM

பழநி : பழநி வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வனத்துறையினர் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் நக்சல் அமைப்பினர் ஆயுதப் பயிற்சி எடுத்தனர். மேலும், கொடைக்கானல் கே.சி.பட்டி அருகே பூலாங்கோடு, பண்ணைக்காடு கஸ்தூரிபாய்புரம் பகுதியில், துணி வியாபாரிகள் போல் நடித்து, பழங்குடியினரை இயக்கத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2008 ஏப்.,19ல், பெரும்பள்ளம் அருகே பொய்யாவளி மேட்டில், போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, நக்சல் நவீன்பிரசாத்தைக் கொன்றனர். ஒரு பெண் டாக்டர் உட்பட ஆறு பேர் தப்பினர். இதையடுத்து, நக்சல் பயங்கரவாத ஒழிப்பு படை அமைக்கப்பட்டது. இக்குழுவினர், வெளிநபர் நடமாட்டம், பழங்குடியினருக்கு அரசு உதவிகளை பெற்றுத் தருவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் பிடிபட்ட ஓமியோபதி பயிற்சி டாக்டர் ரஞ்சித் தகவலின்படி, பாச்சலூர் அருகே செம்பரான்குளத்தில் ஏழு ஜெலட்டின் குச்சிகள், நக்சல்களின் உடைகள் கைப்பற்றப்பட்டன. தற்போது பழநி வனப்பகுதியில், வெளிநபர்களின் நடமாட்டம் காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து பழநி-கொடைக்கானல் ரோடு 'செக்- போஸ்ட்'ல், வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுகின்றன. பழநி ரேஞ்சர் தர்மராஜ் தலைமையில், நேற்று 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தேக்கந்தோட்டம், பாலாறு அணை, கெங்குவார் ஓடை, பெரிய அணைக்கட்டு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். இப்பகுதியில் கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.