Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வக்பு வாரியத்திற்கான மானியம் ஒரு கோடி ரூபாயாக அதிகரிப்பு : பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் விவரம்

வக்பு வாரியத்திற்கான மானியம் ஒரு கோடி ரூபாயாக அதிகரிப்பு : பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் விவரம்

வக்பு வாரியத்திற்கான மானியம் ஒரு கோடி ரூபாயாக அதிகரிப்பு : பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் விவரம்

வக்பு வாரியத்திற்கான மானியம் ஒரு கோடி ரூபாயாக அதிகரிப்பு : பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் விவரம்

ADDED : ஆக 05, 2011 02:34 AM


Google News

திருநங்கையர் நலன்: திருநங்கையர் நலனுக்காக, திருநங்கையர் நல வாரியத்தின் மூலம், வருவாய் ஈட்டும் தொழில்களில் ஈடுபடும் சுயஉதவிக் குழுக்களுக்கு, தொழில் துவங்க 25 சதவீத மானியத்தில் 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும்.

இந்த வாரியத்தின் மூலம் பல நலத்திட்டங்களை செயல்படுத்த, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



சிறுபான்மையினர் நலன்: தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு நிர்வாக மானியமாக வழங்கும் 45 லட்சம் ரூபாய், ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உலமாக்கள் ஓய்வூதிய திட்டத்தில், நிலுவையிலுள்ள விண்ணப்பதாரர்களும் பயனடையும் வகையில், மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை 2,600 ஆக அதிகரிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் வழங்கப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் இனி 1,000 ரூபாயாக வழங்கப்படும். வக்பு வாரியத்தின் செயல்பாடுகளை சீரமைக்கவும், அதன் சொத்துக்கள் அனைத்தையும் திரும்ப அதன் வசமே கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுக்கும். வாரிய ஓய்வூதியதாரர்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பணிக்கொடைகளை வழங்க, ஒரு முறை மானியமாக, மூன்று கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கும்.



இலங்கைத் தமிழர் நலன்: தமிழக மக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளும், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் தமிழக அரசு வழங்கி வருகிறது. முகாம்களிலுள்ள வீடுகளையும், அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள 416 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம் சுழல் நிதி வழங்கப்படும். குடும்பத் தலைவருக்கு வழங்கும் மாதாந்திர உதவித்தொகை 400 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற குடும்ப உறுப்பினர்களுக்கு 288 ரூபாயில் இருந்து, 750 ரூபாயாகவும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உதவித் தொகை 400 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.



நெசவாளர் நலன்: கூட்டுறவு அமைப்பு, முறைசாராப் பிரிவுகளிலுள்ள நெசவாளர்களை நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில், ஓய்வூதியம், கல்வி, மருத்துவ உதவிகள், விபத்து போன்றவற்றிற்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. வாரிய உறுப்பினர்களுக்கு, தனிநபர் ஓய்வூதியம் 450 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 550 ரூபாயாகவும், இனி மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.



அரசு அலுவலர், பத்திரிகையாளர் நலன்: அரசுப் பணியாளர்கள் ஊதியச் செலவுகளுக்காக, 27 ஆயிரத்து 91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடுகளை களைய, தி.மு.க., அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்திய பின்னும், ஊதிய முரண்பாடுகள் நிலவுகிறது என அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இது குறித்த வழக்கு கோர்ட்டில் உள்ளதால், ஊதிய முரண்பாடுகள் குறித்த கோரிக்கைகளை கவனமாக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். ஓய்வூதியதாரர்களின் வயது அதிகமாகும்போது, ஓய்வூதியத்தையும் அதிகரித்து மத்திய அரசு வழங்குகிறது. அதுபோல், தமிழக அரசு வழங்கி வருகிறது. ஓய்வூதியச் செலவினங்களுக்காக, நடப்பாண்டு 11 ஆயிரத்து 942 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.



பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 5,000த்தில் இருந்து, 6,000 ரூபாயாகவும், அவர்களின் குடும்ப ஓய்வூதியம் 2,500 ரூபாயிலிருந்து, 3,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். தலைமைச் செயலகத்தில், ஊடகங்களுக்கென ஒரு மையம், 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். 'வாட்' வரியில் விலக்களிக்கப்பட்ட சிறு, குறு வணிகர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்களாகச் சேர்ந்து, அரசின் பயன்களை பெற தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. உறுப்பினர் புதுப்பித்தல் கட்டணம் 100 ரூபாய் செலுத்துவதற்கு பதில், உறுப்பினராக சேரும்போதே 500 ரூபாய் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராக சேரலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us