இனி பொறுப்பதில்லை: கருணாநிதி ஆவேசம் : இன்று நடக்கும் பொதுக்குழுவில் முக்கிய முடிவு
இனி பொறுப்பதில்லை: கருணாநிதி ஆவேசம் : இன்று நடக்கும் பொதுக்குழுவில் முக்கிய முடிவு
இனி பொறுப்பதில்லை: கருணாநிதி ஆவேசம் : இன்று நடக்கும் பொதுக்குழுவில் முக்கிய முடிவு

கோவை : நில அபகரிப்பு வழக்கு தொடர்பாகவும், தேர்தல் தோல்வி குறித்தும், கோவையில் நடந்த தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அவரைத் தொடர்ந்து, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி, முன்னாள் அமைச்சர்கள் நேரு, துரை முருகன், வீரபாண்டி ஆறுமுகம், ஆற்காடு வீராசாமி, பொன்முடி உள்ளிட்டோர் அடுத்தடுத்து வந்தனர்.
மாலை 4.30 மணியளவில் துவங்கிய செயற்குழு கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், துணைப் பொது செயலாளர் சற்குண பாண்டியன், தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட 200 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், ''புகார் வந்தால், கட்சியில் இருந்து பிரமுகர்கள் நீக்கப்படுகிறார்கள்;இந்நிலை மாற வேண்டும். கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. உண்மைத் தொண்டர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும்,'' என்றார்.
செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி பேசியது: ஒரு மாநிலத்தில் பெரிய பொதுத்தேர்தல் நடைபெற்று, அதில், தி.மு.க., மகத்தான வெற்றி பெறும் என நம்பிக்கையோடு இருந்து, நேர்மாறான விளைவுகள் ஏற்பட்டதன் காரணமாக, இன்று ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் எதிர்க்கட்சி குழுக்களில் ஒன்றாக இருக்கும் இடம் பெற்றுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
இது யாரால் வந்த நிலை என்று சிந்திப்பதை விட, நமக்கு நாமே தேடிக் கொண்ட முடிவு. ஒவ்வொருவரும் நம் உள்ளத்தை தொட்டுப்பார்த்து, நெஞ்சை தடவிப்பார்த்து, தெரிந்து கொண்டுள்ள அந்த உண்மையை மீண்டும் மீண்டும் கிளறி யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் கழகமே புண்பட்டுள்ளது.
ஏனென்றால் இன்று கழகம் புண் பட்டிருக்கிறது. கழகம் புண் பட்டிருக்கிறதென்றால் நான் புண்பட்டிருக்கிறேன். பேராசிரியர் புண்பட்டிருக்கிறார். கழகத்தின் தளபதிகள் புண் பட்டிருக்கின்றனர். கழகத்தை முன்னெடுத்து செல்லக்கூடிய முன்னணி வீரர்கள் எல்லோரும் புண் பட்டிருக்கிறார்கள்.
இந்த புண்ணை ஆற்றிக் கொள்ள, மீண்டும் தி.மு.க.,வின் ஆற்றில் பெருகி, அகிலும் பரவ இரு வண்ணக் கொடியை ஏற்றுகிற காலம் நிச்சயமாக வரும்; வர வேண்டும் என்பதற்காகவே, நாம், இன்று பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கிறோம். 20, 22 பேரோ, சட்டசபையில் இருப்பதாலோ, நாடாளுமன்றத்தில் சில பேர், கழகத்தின் சார்பில் இடம் பெற்றிருப்பதாலோ, பெரியளவில் மகத்தான மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று எண்ணிக் கொள்ள முடியாது.
அரசியலில் இடம் பெறுகிற நோக்கத்துக்காக, கழகத்தை துவக்கவில்லை. அன்று முதல் இன்று வரை பதவிகளுக்காக, ஆடம்பரங்களுக்காக அரசியலுக்காக பதவிகளை பெற்று, அரசியலை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. இனத்துக்காக துவங்கப்பட்ட கழகம் தி.மு.க., இன்று, ஒரு கட்சியினுடைய வெற்றி, தோல்விகளால் ஒரு கொள்கை நிர்ணயிக்கப்படுகிறது என்று யாரும் சொல்ல முடியாது.
இப்போது வெற்றி பெற்றிருக்கிற அக் கட்சியின் வெற்றியில் கொள்கை நிர்ணயிக்கப்பட்டுள் ளதா என்று கேட்டால், ஒரு முட்டாள் கூட, கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்ல மாட்டான். யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, நமக்கு கிடைத்துள்ள தோல்வி நம் கொள்கைக்கு, லட்சியத்துக்கு எதிர்காலத்துக்கு, சந்ததியினருக்கு, வருங்கால தலைமுறைக்கு கிடைத்துள்ள தோல்வி என்று மறந்து விடக் கூடாது.
அதனால் தான் இன்றைக்கு நீட்டி முழங்கி தி.மு.க.,வை அழித்து விட்டோம் என்றெல்லாம், கொல்லுக பட்டர்களும், சோ போன்றவர்களும், வேறு சிலரும் கேலி செய்கிறார்கள். ஏடுகளை ஒவ்வொரு நாளும் புரட்டினால், படிக்க முடியாத அளவுக்கு, அதை படித்து முடிக்கலாமா; வேண்டாமா என ஐயப்பட்டு, அதை எறிந்து விட்டு வருகிற அளவுக்கு, தி.மு.க,. தோழன், தொண்டன், தன் ரத்தத்தை கொட்டி வளர்த்தானே.
இந்த இயக்கத்தை வளர்த்த அந்த தொண்டன், தோல்வி வந்து விட்டதே என்று கண்ணீர் விட்டு வருகிறார். ஆனால், நான் சொல்கிறேன். இதை தோல்வி என்று கருதக் கூடாது. நாம் சந்திக்காத தோல்விகள் இல்லை. தி.மு.க.,வை பொறுத்தவரை, ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது, ஒரே இடத்தில் தான் வெற்றி பெற முடிந்தது.
சென்னை துறைமுகம் தொகுதியில் நான் மட்டும் வெற்றி பெற்று அதையும் ராஜினாமா செய்து விட்டு, அன்றைக்கு கழகம் தனித்து எவ்விதமான உதவியும் இன்று, நிற்க நேர்ந்த அந்தக் காலத்தில் கூட, ஒரு தொகுதியில் இருந்து, தொடர்ந்து பல தொகுதிகளை பெற்று ஆட்சியை அமைத்தோம் என்றால், மீண்டும் அந்தக் காலம் வராமல் போகாது.
மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற காரணத்தால், கொள்கைகள், எண்ணங்கள், கருத்துகள், லட்சியங்கள், குறிக்கோள் எல்லாம் நிறைவேற நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.
எதிரே அமர்ந்திருக்கின்ற நண்பர்களை எல்லாம், எப்போது வந்தீர்கள் என்று கேட்கக் கூட, மனம் துணிவை பெறவில்லை. அந்தளவுக்கு, தேடப்படுபவர்களாக, வேட்டையாடப்படுபவர்களாக, விலங்கு மாட்டுவதற்கு தயாராக இருக்கிறோம் என அழைக்கப்படுபவர்களாக, நாம் உள்ளோம். அதற்காக, நாம் நிலைகுலைந்து போய்விடவில்லை.
இந்த நிலையிலும் கூட, நமது செயற்குழு கூட்டத்துக்கு மண்டபம் நிறைந்து வழிகிற அளவுக்கு வந்திருக்கிறீர்கள் என்றால், தி.மு.க.,வை எவனும், எந்த நேரத்திலும் அழித்து விட முடியாது. தி.மு.க., என்பது எக்கு கோட்டை. அது, ஊதி, ஊதி அலைகழிக்கப்படுகிற துரும்பு அல்ல; தூண். இந்த தூணை, ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்பதை நீண்ட நெடுங்காலமாக நிரூபித்து, நமது கொடி நிழலில் கொள்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி, தி.மு.க.,வுக்கு புதியதல்ல. இங்கு வீரபாண்டி ஆறுமுகம் தேடப்படுகிறார் என்பது மட்டுமல். நானே தேடப்பட்டவன் தான். நம்முடைய கழகத்தின் முன்னணி வீரர்கள் எல்லாம் தேடப்பட்டவர்கள் தான்.
ஜெ., ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த திங்களிலேயே என்னை என்ன பாடுபடுத்தி சிறையில் அடைத்தார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எமர்ஜென்சியை விட கொடுமையா? இந்தியாவிலும் தமிழகத்திலும் வரப்போகிறது. எமர்ஜென்சியையே ஊதியவர்கள் நாம்; யாருக்கும் பயப்பட மாட்டோம். அத்தகைய துணிச்சல் மிக்க சிங்கங்களாக, வேங்கைகளாக, வீரர்களாக இருக்கிறோம்.
கழக வளர்ச்சிக்கு என்னென்ன காரியங்களை ஆற்ற வேண்டும் என்பது பற்றியெல்லாம், நாளை (இன்று) பேசயிருக்கிறோம். அதற்கான தீர்மானங்கள் என்னென்ன? 25, 30 தீர்மானங்களுக்கு மேல் நிறைவேற்றப்பட உள்ளன.
இனி பொறுப்பதில்லை என்ற பாரதியின் வாக்கை மனதில் பதிய வைத்து, பொறுப்பதில்லை என்று சொல்வதிலிருந்து அந்த நிலையை அடைய வெற்றி பெற்றிட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம், நிர்ணயிக்கிற குழுவாக, நாளை (இன்று) நடக்கவுள்ள பொதுக்குழு அமைய உள்ளது.