ஐ.ஐ.டி., எம்.டெக்., மாணவர் தற்கொலை : மூன்றாண்டுகளில் இது ஐந்தாவது சம்பவம்
ஐ.ஐ.டி., எம்.டெக்., மாணவர் தற்கொலை : மூன்றாண்டுகளில் இது ஐந்தாவது சம்பவம்
ஐ.ஐ.டி., எம்.டெக்., மாணவர் தற்கொலை : மூன்றாண்டுகளில் இது ஐந்தாவது சம்பவம்
ADDED : ஆக 31, 2011 11:59 PM
சென்னை : சென்னை ஐ.ஐ.டி., காவேரி விடுதியில், எம்.டெக்., முதலாண்டு மாணவர், மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, திருவொற்றியூர், சாத்துமாநகர், வரதராஜன் தெருவைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் மகன் கவுரிசங்கர், 36. பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இந்நிறுவனத்தின் சார்பில் மேற்படிப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட கவுரி சங்கர், சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.டெக்., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதலாண்டு படித்து வந்தார். இதற்காக, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள காவேரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று காலை 11:30 மணியாகியும் கவுரி சங்கர் தங்கியிருந்த, 372 வது அறை கதவு திறக்கப்படாததால், விடுதியின் வார்டன் சென்று திறந்து பார்த்துள்ளார். அப்போது, அசைவற்ற நிலையில் கவுரி சங்கர் கிடந்துள்ளார். இதையடுத்து, ஐ.ஐ.டி., வளாக டாக்டர் நடராஜன் வரவழைக்கப்பட்டார். டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு, கவுரிசங்கர் இறந்து விட்டதாகவும், விஷம் அருந்தியுள்ளதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஒரு மணியளவில், கோட்டூர்புரம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து, கவுரிசங்கரின் உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவுரி சங்கரின் இந்த மரண முடிவிற்கான காரணம் தெரியவில்லை. சம்பவத்தில் உள்ள மர்மம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கவுரி சங்கருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது தெரியவில்லை. சென்னை ஐ.ஐ.டி.,யை பொறுத்தவரை, கடந்த மூன்றாண்டுகளில், இது ஐந்தாவது தற்கொலையாகும். கடந்த 2008ல் அக்டோபர் மாதம் இதே வளாகத்தில், எம்.டெக்., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவந்த, சங்கர் பெருமாள் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து, கடந்த 2010, மே மாதம், எம்.டெக்., எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்த சந்தீப் என்பவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தாண்டில், பிப்ரவரி மாதம் 24ம் தேதி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவந்த அனூப் என்ற மாணவர், பாடங்களில் பெயில் ஆனதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து, மே மாதம் 4 ம் தேதி, ஆந்திரமாநிலத்தை சேர்ந்த, லட்சுமண மூர்த்தி என்பவர் மகன் நிதின் குமார் ரெட்டி, 24. மெக்கானிக்கல் பிரிவில் எம்.டெக்., இறுதியாண்டு படித்து வந்தார். ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள, ஜமுனா விடுதியில் தங்கியிருந்த இவர், போர்வையை இரண்டாக கிழித்து, முறுக்கி அதை பயன்படுத்தி, பேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து, தற்போது இந்தாண்டில் மூன்றாவதாக, மெக்கானிக்கல் பிரிவு மாணவர் கவுரிசங்கர் இறந்துள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் படித்த, இந்த மாணவர்களின் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மம் குறித்து, விரிவான விசாரணை நடத்தினால், உண்மை நிலவரம் வெளிவரும் என கூறப்படுகிறது.