PUBLISHED ON : ஆக 04, 2011 12:00 AM

அரசியல் நடத்த முடியாது பா.ம.க., : பூங்குருநல் அசோகன், சரவணம்பட்டி, கோவையிலிருந்து எழுதுகிறார்: கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் குடும்ப அரசியல் காரணமாக, மக்கள் எழுப்பிய எதிர்ப்பாலைகளால், தம் கட்சி கடுமையான தோல்வியைத் தழுவி விட்டதாக, பா.ம.க., தெரிவித்துள்ளது. தி.மு.க., தலைமை மீது, தொடர்ந்து குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள பா.ம.க., இனிமேல், அ.தி.மு.க.,வையும் எதிர்க்குமாம்! இவர்களின் கடந்த கால வரலாற்றில், அ.தி.மு.க., தலைமையை எதிர்க்கும் துணிவுக்கு, ஆதாரம் ஏதுமில்லை. அத்தகு துணிச்சலும், வீரமும் பா.ம.க., தலைவருக்கு இனியேனும் துளிர் விடுமா என்பது சந்தேகமே; அப்படியிருக்கையில், இவர்களை நம்பி, பிற கட்சியினர் எப்படி கூட்டணியில் சேருவர்?
தி.மு.க.,வுக்கு, ஒரு கொள்கை உண்டு; அது, அ.தி.மு.க.,வை எதிர்ப்பது. அ.தி.மு.க.,வுக்கும், ஒரு கொள்கை உண்டு; அது, தி.மு.க.,வை எதிர்ப்பது. மற்ற கட்சிகளுக்கு, என்ன கொள்கை இருக்கிறது? தேர்தலுக்குத் தேர்தல், தமக்கு முதுகு கொடுத்தவர்களையே எட்டி உதைத்துவிட்டு, அடுத்த முதுகைத் தேடுவதுதானே, இவர்களது வாடிக்கை!
தி.மு.க., தலைமை, குடும்ப அரசியல் நடத்துவது, பா.ம.க.,வின் குற்றச்சாட்டு. 1993ல், வைகோ தொடுத்த கணைதானே அது... அவரே தி.மு.க.,வுடன் கூட்டணியில் சேர்ந்து, தேர்தலை சந்திக்கவில்லையா?
தி.மு.க., தலைமை மட்டும், இப்போது குடும்ப அரசியலை நடத்தவில்லை. நேரு, சாஸ்திரி, சரண்சிங், தேவ கவுடா குடும்பங்கள், மத்திய அரசிலும், பரூக் அப்துல்லா தொடங்கி, புதுவை மாநில வெங்கட சுப்பா ரெட்டியார் வரை, அனைத்து மாநிலங்களிலும், குடும்ப அரசியல்தான் நடக்கிறது; பா.ம.க.,வும், அதைத்தான் செய்கிறது.
தி.மு.க., தலைமை செய்த, அத்தனைக் காரியங்களையும் காப்பியடித்துக் கொண்டிருக்கும் பா.ம.க., தலைமை, கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கொண்டு, கல்லெறியக் கூடாது. பா.ம.க., தன் குறைகளைக் களைந்து, பொது வாழ்வில், அனைத்து இன மக்களின் நம்பிக்கையையும் பெருமளவுக்கு, தன் குண நலன்களை மாற்றிக் கொள்ளாதவரை, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக வளர முடியாது. தே.மு.தி.க., நிலையைக் கூட எட்ட முடியாது. தன் குடும்ப நலனையும், ஒரு சில குறிப்பிட்ட வன்னியர் குழுக்களை மட்டுமே முன்னிறுத்தி, தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது.
இன்றைய தலைமுறை கதி?
ஆ.சிவமணி, புன்செய்ப்புளியம்பட்டியிலிருந்து எழுதுகிறார்: தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு தொடர, தமிழக அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது. அரிவாள் கலாசாரம், ரத்த ஆறு ஓடுதல், வக்கிரமான ஆபாசம் என, குடும்பத்தோடு பார்க்க முடியாமல் தான், தமிழ் சினிமாவின், 90 சதவீத படங்கள் வருகின்றன.
முந்தைய அரசோ, 'பெயர் மட்டும் தமிழில் இருந்தால் வரிவிலக்கு' என, கூறியது. அதாவது, ஒரு பாட்டிலில் விஷத்தை ஊற்றி விட்டு, அதன் மேல் தேன் என எழுதி ஒட்டியது போல, அந்த விதிமுறை இருந்தது.
ஒரு திரைப்படம், சமுதாயம் சீரழியும் நோக்கில் அமையக்கூடாது; நல்ல சமுதாயத்துக்கு வழி காட்டியாய் தான், அமையவேண்டும். லாபம் மட்டுமே குறி என்றால், இளைய தலைமுறையின் கதி...?
இப்போது என்ன சொல்லுவார்?
ரா.சம்பத்குமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இரண்டாண்டு கால இழுபறிக்குப் பின், தம் மீதான புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு கூடுவதற்கு, ஒரு நாள் முன்பாக, சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதி பி.டி.தினகரன் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தில், 'ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்தது தான், என் துரதிர்ஷ்டம்' என, குறிப்பிட்டுள்ளார்; கொடுமை!
ஏனெனில், அவர் மீதான புகார் பட்டியலில் உள்ள, ஒரு டஜன் முறைகேடுகளில், 'அரசு மற்றும் பொதுச் சொத்தை ஆக்கிரமித்து, தலித் மற்றும் ஏழைமக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்தது; தலித் மற்றும் ஏழை மக்களின், மனித உரிமைகளை மீறியது' ஆகியவையும் அடங்கும். அதை விடக் கொடுமை, தாம் வகிக்கும் பதவியின் கண்ணியத்தைத் தூக்கிப்பிடிக்கவே, தாம் ராஜினாமா செய்வதாகக் அவர் குறிப்பிட்டதாகும்.
தலித் மற்றும் சிறுபான்மையினரின், ஒரே பாதுகாவலராகத் தம்மைக் காட்டிக் கொள்பவர் கருணாநிதி என்பது, அனைவருக்கும் தெரியும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 'ராஜா ஒரு தலித் என்பதற்காக, குறி வைக்கப்படுகிறார்' என்பதையாவது, தமது கட்சியினருக்காகப் பரிந்து பேசினார் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தினகரன் விவகாரம் வெடித்தபோதும், சம்மன் இல்லாமல் ஆஜராகி, 'தினகரன், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பதால்தான், புகார்கள் கூறப்படுகின்றன' என்றார். இப்போது என்ன சொல்லுவார்?
முடிந்தது எடியூரப்பா திருவிளையாடல்!
வீ.சுந்தரமகாலிங்கம், திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: கர்நாடகாவில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் திருவிளையாடல், ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இரண்டு வருடங்களாக, எத்தனையோ இடைஞ்சல்கள், எதிர்ப்புகள் வந்த போதிலும், எப்படியோ சமாளித்து, முதல்வர் பதவியை, சாமர்த்தியமாகத் தக்க வைத்துக் கொண்டார்.
'கெட்டிக்காரன் புளுகு, எட்டு நாளைக்குள் தெரியும்' என்பதைப் போல, சமீபத்தில், லோக் ஆயுக்தாவின் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கொடுத்துள்ள அறிக்கையில், எடியூரப்பா மீது கூறப்பட்ட லஞ்ச குற்றச்சாட்டுகளின் விளைவாக, அவர் பதவி விலகும்படி ஆயிற்று. அப்போது கூட, 'எனக்குப் போதிய ஆதரவு இருப்பதால், மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பேன்' என்று பிடிவாதமாக இருந்தார். கடைசியாக, கட்சித் தலைமையின் கட்டாயத்தில், பதவி விலகினார். எடியூரப்பாவின் குடும்ப டிரஸ்ட்டுக்கு, 10 கோடி ரூபாய் நன்கொடையும், 20 கோடி ரூபாய் விலையில், ஒரு ஏக்கர் நிலம் தந்துள்ளதாகவும், இவரது அமைச்சரவையில் உள்ள, ரெட்டி சகோதரர்களின் இருப்புத் தாது சுரங்க நிறுவனங்கள், இதற்கு நிதி உதவியதாகக் குற்றச்சாட்டு வெளிப்படுத்தியது தான், எடியூரப்பாவின் திருவிளையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. இவரது அமைச்சரவையில், ரெட்டி சகோதரர்கள் இருவரும், மற்ற இரு அமைச்சர்களும், ராஜினாமா செய்ய நேர்ந்தது. இந்த இரும்புத்தாது சுரங்கங்களின் சட்டத்துக்குப் புறம்பான செயல்களால், அரசுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும், லோக் ஆயுக்தா கூறியுள்ளது. இதன் உதவியால் தான், எடியூரப்பா, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு, 'தானம்' தந்து, பதவியைத் தக்க வைத்தார் எனக் கருத இடமளிக்கிறது.