/உள்ளூர் செய்திகள்/சென்னை/லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கோயம்பேட்டில் நிலம் ஒதுக்கீடுலஞ்ச ஒழிப்புத் துறைக்கு கோயம்பேட்டில் நிலம் ஒதுக்கீடு
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கோயம்பேட்டில் நிலம் ஒதுக்கீடு
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கோயம்பேட்டில் நிலம் ஒதுக்கீடு
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கோயம்பேட்டில் நிலம் ஒதுக்கீடு
ADDED : ஆக 23, 2011 02:00 AM
சென்னை : லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு, சொந்தக் கட்டடம்
கட்ட, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நிலம் ஒதுக்க, கருத்தளவில்
சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்கியுள்ளது.தமிழகத்தில் லஞ்சஒழிப்புத் துறை
துவங்கப்பட்டு, முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும், இதற்கு என சொந்த அலுவலக
வளாகம் கட்டப்படவில்லை. அதற்காக நிலமும் ஒதுக்கப்படவில்லை.கடந்த
பத்தாண்டுக்கு முன்பு வரை, இத்துறை அண்ணாசாலையில் ராணி சீதை அரங்கம்
அருகில் உள்ள வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.அந்த சமயத்தில்,
சென்னை அடையாறு திரு.வி.க., பாலம் அருகில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான
நிலத்தில், நீதிபதிகளுக்காக கட்டப்பட்ட குடியிருப்பு கட்டப்பட்டது.இங்கு
காலியாக உள்ள குடியிருப்புகளைத் தங்களது அலுவலகப் பயன்பாட்டுக்கு ஒதுக்கித்
தர வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து, அரசுக்கு கோரிக்கை
வந்தது.இதை ஏற்ற அப்போதைய அரசு, நீதிபதிகளுக்காகக் கட்டப்பட்ட
குடியிருப்புப் பகுதியில், 21 முதல் 28 வரையிலான எட்டு கட்டடங்களை தற்காலிக
ஏற்பாடாக, பொதுப்பணித் துறை மூலம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒதுக்கியது.
இதையடுத்து, அண்ணா சாலையில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர்
அலுவலகம், இப்பகுதிக்கு மாற்றப்பட்டது. புதிய அலுவலகத்தை, 2002ம் ஆண்டு
டிசம்பரில், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்து வைத்தார்.இடப்
பற்றாக்குறை:தேவைக்கு ஏற்ப உருவாக்கப்படும் புதிய பதவிகள் காரணமாக, லஞ்ச
ஒழிப்புத் துறையில், ஊழியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. இதனால், இத்துறைக்கு, இங்கும் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே,
சில குறிப்பிட்ட பிரிவுகள், நந்தனத்தில் உள்ள சம்பளம் மற்றும் கணக்குப்
பிரிவு அலுவலக வளாகத்துக்கு மாற்றப்பட்டது.இருப்பினும், இடப் பற்றாக்குறை
பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டபாடில்லை. இந்தச் சமயத்தில், துவக்கத்தில்
ஆர்வம் காட்டாத நீதிபதிகள், தங்களுக்கான குடியிருப்பில் உள்ள, அனைத்துக்
கட்டடங்களையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.
இதனால், தங்கள் துறைக்குச் சொந்தக் கட்டடம் கட்ட நிலம் தேடும் பணியில்,
லஞ்ச ஒழிப்புத் துறை இறங்கியது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், சுமார்
இரண்டு ஏக்கர் காலி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது.சி.எம்.டி.ஏ.,
ஆய்வு:இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறையின் கோரிக்கைக் கடிதம் குறித்து,
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வைத்திலிங்கம்
தலைமையில், அண்மையில் நடந்த சி.எம்.டி.ஏ., கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டது.இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத சி.எம்.டி.ஏ.,
அதிகாரி ஒருவர் கூறியது, ''சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டில் உள்ள, கோயம்பேடு
மொத்த வணிக வளாகத்தில், காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிரதான
வணிகப் பகுதி மனை எண்கள் 9 மற்றம் 10ஐ லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒதுக்கீடு
செய்வது தொடர்பான கோப்பு ஆய்வு செய்யப்பட்டது.இவ்வாறு, நிலம் ஒதுக்கீடு
பெற, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உள்துறையின் அரசாணை தேவை. எனவே, இந்த மனைகள்
அவர்களின் ஒதுக்கீட்டிற்கு இருப்பில் உள்ளதாக, அவர்களுக்குத்
தெரிவிக்கப்படும். இதனைப் பெறுவதற்கான, அரசாணை வந்த பின்னர்,
சி.எம்.டி.ஏ.,வின் இறுதி ஒப்புதல் அளிக்கலாம் என, முடிவு செய்யப்பட்டது.
இப்போதைய நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நிலம் ஒதுக்க, கருத்தளவில்
ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக நடைமுறை முடிந்த பின், இறுதி ஒப்புதல்
வழங்கப்படும்'' என்றார் அவர்.
வி.கிருஷ்ணமூர்த்தி