Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அ.தி.மு.க., ஆட்சியில் எடுக்கப்பட்டதால் பதவி உயர்வில் புறக்கணிப்பு :98 எஸ்.ஐ.,க்கள் முதல்வரிடம் மனு

அ.தி.மு.க., ஆட்சியில் எடுக்கப்பட்டதால் பதவி உயர்வில் புறக்கணிப்பு :98 எஸ்.ஐ.,க்கள் முதல்வரிடம் மனு

அ.தி.மு.க., ஆட்சியில் எடுக்கப்பட்டதால் பதவி உயர்வில் புறக்கணிப்பு :98 எஸ்.ஐ.,க்கள் முதல்வரிடம் மனு

அ.தி.மு.க., ஆட்சியில் எடுக்கப்பட்டதால் பதவி உயர்வில் புறக்கணிப்பு :98 எஸ்.ஐ.,க்கள் முதல்வரிடம் மனு

ADDED : ஜூலை 11, 2011 10:30 PM


Google News

கடந்த, 1994-95 அ.தி.மு.க., ஆட்சியின் போது, நேரடி எஸ்.ஐ.,க்களாக தேர்வு செய்யப்பட்ட, 98 பேர், உரிய சீனியாரிட்டி வழங்கி, பதவி உயர்வு அளிக்கப்படாததால், ஜூனியர்களுக்கு கீழ் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சீனியாரிட்டி கோரி, முதல்வரை கடிதம் மூலம் அணுகியுள்ளனர். கடந்த, 1994-95ல், அ.தி.மு.க., ஆட்சியில், தமிழக காவல் துறை டி.ஜி.பி., யாக இருந்த வைகுந்த் மூலம், நேரடி எஸ்.ஐ., தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வில், நேர்மையான முறையில், 1,198 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 1996ல், 500 பேரும், 1997, ஜூனில், 600 பேரும், பயிற்சிக்கு அனுப்பப்பட்டு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதில், ஒதுக்கி வைக்கப்பட்ட, 98 பேரும் அதிகப்படியாக எடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறி, நான்கு ஆண்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதற்கிடையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட, தி.மு.க., ஆட்சியைப் பிடித்தது. தி.மு.க., ஆட்சியின் போது, 1999ல், 1,000 பேர் நேரடி எஸ்.ஐ.,க்களாக தேர்வு செய்யப்பட்டு, அதே ஆண்டு மற்றும் அடுத்தாண்டில், நேடியாக போலீஸ் நிலையங்களில் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்டனர். இதனால், 1994-95ல் தேர்வு செய்யப்பட்டு, விடுபட்ட, 98 பேரும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நேரடி எஸ்.ஐ.,க்களின் நியமனத்தை சுட்டிக்காட்டி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போட்டனர். வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்த போது, 1997, 98 மற்றும் 99ம் ஆண்டுகளில், அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த, அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், சட்டசபையில், 98 பேருக்கு, பதவி ஆணை வழங்கக் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, 98 பேருக்கும் நியமன ஆணை வழங்கிய தி.மு.க., அரசு, போலீஸ் நிலையங்களில் நியமிப்பதற்குப் பதில், தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் எஸ்.ஐ., பதவிகளில் நியமித்தது. அதே நேரத்தில், 'எஸ்.ஐ.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், 1994-95ம் ஆண்டு சீனியாரிட்டியை கேட்கக் கூடாது' என, தி.மு.க., அரசு கட்டாயமாக எழுதி வாங்கியது. இது ஒரு புறம் இருக்க, 1997-98ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்ட, 1,000 எஸ்.ஐ.,க்கள் தேர்வு குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஐகோர்ட்டில் அளித்த அறிக்கையில், ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்ததையடுத்து, அவர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்டவர்கள், தாங்கள் பணியில் இருந்ததை காட்டி, மீண்டும் முறையிட்டதால், 1,000 பேரும் பணியில் தொடரலாம் என உத்தரவிடப்பட்டது. அத்துடன், வழக்கு தொடர்ந்த, 46 பேருக்கும், ஐகோர்ட் உத்தரவின் பேரில், எஸ்.ஐ.,க்களாக, 2006ல் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.மேலும், அவர்கள் கலந்து கொண்ட எஸ்.ஐ., தேர்வு நடந்த, 1999ம் ஆண்டுக்கான இடை நிலை சீனியாரிட்டியும் வழங்கப்பட்டது. இந்த சீனியாரிட்டி வழங்கப்பட்டதால் தான், ஒதுக்கி வைக்கப்பட்டு பணி நியமனம் கிடைத்த, 98 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி வந்துள்ளதால், தங்களுக்கு, 1994-95ம் ஆண்டு சீனியாரிட்டி வழங்க கோரி முதல்வரிடம் மனு அளித்துள்ளனர். இது குறித்து, பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதால், தி.மு.க., ஆட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டோம். இதனால், எங்களுக்குப் பின் ஐந்தாண்டுகள் கழித்து, தி.மு.க., ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இன்ஸ்பெக்டர்களாகி விட்டநிலையில், நாங்கள் மட்டும் இன்னும் எஸ்.ஐ.,க்களாகவே பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய சீனியாரிட்டியை வழங்க தி.மு.க., அரசு மறுத்துவிட்டது. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பின்பே, 2007ல், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டோம். அங்கு, எங்களுக்குப் பின் எஸ்.ஐ.,யாக சேர்ந்த பலரின் கீழ் நாங்கள் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது எங்களில் பலர், 40 வயதை கடந்தும் எஸ்.ஐ.,க்களாகவே இருக்கின்றனர். எனவே, எங்கள் உண்மையான பணி மூப்பை முதல்வர் வழங்கி, கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us