ADDED : ஆக 11, 2011 11:08 PM
ஐதராபாத்:தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர் கோதண்டராம் கூறியுள்ளார்.தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, அப்பகுதி அரசு ஊழியர்கள் வரும் 17ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
ஆந்திர மாநில அரசு அவர்களை நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், அரசு ஊழியர் சங்கங்கள் அதை நிராகரித்தன. இந்நிலையில், அரசு ஊழியர்களின் போராட்ட தேதி மாற்றப்படுவதாக, தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் கோதண்டராம் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, கோதண்டராம் கூறியதாவது:தற்போது ரம்ஜான் மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியும் வர உள்ளது. எனவே, இந்த நேரத்தில், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தால், அது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். மேலும், தெலுங்கானாவுக்காக, அனைத்து தரப்பு மக்களும் போராட தயாராக உள்ள நிலையில், அரசு ஊழியர்களின் தலையில் அதிக சுமையை வைக்க விருப்பமில்லை. எனவே, போராட்டத்தின் தன்மையை மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, வரும் 17 ம் தேதி தொடங்க இருந்த அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட தேதி மாற்றப்படுகிறது. எனினும், திட்டமிட்டபடி அதே தேதியில் தெலுங்கானாவுக்கான போராட்டம் தொடங்கும். தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு சார்பில், வரும் 17ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை, பெரிய அளவில் தர்ணா போராட்டங்கள் நடக்கும். இதற்காக, தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவினர், மக்களை சந்தித்து, அவர்களை ஒன்று திரட்டுவர். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் 5ம் தேதி கரீம் நகரில் மிகப்பெரிய அளவிலான கண்டனப் பேரணி நடக்கும். பின், செப்டம்பர் 6ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் எங்கள் போராட்டத்தில் கலந்துகொள்வர்.இவ்வாறு கோதண்டராம் கூறினார்.