/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் உடன்குடி : போதிய மழையில்லாமல் விவசாயம் அழிந்ததுவறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் உடன்குடி : போதிய மழையில்லாமல் விவசாயம் அழிந்தது
வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் உடன்குடி : போதிய மழையில்லாமல் விவசாயம் அழிந்தது
வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் உடன்குடி : போதிய மழையில்லாமல் விவசாயம் அழிந்தது
வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் உடன்குடி : போதிய மழையில்லாமல் விவசாயம் அழிந்தது
உடன்குடி : உடன்குடி பகுதிகளில் கடந்த 20 வருடமாக பருவ மழை பொய்த்துவிட்டதால் விவசாயம் அழியும் நிலையில் உள்ளது.
உடன்குடியின் அடையாளம் வெற்றிலை, கருப்புகட்டி : உடன்குடி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வெற்றிலைதான். அந்த அளவிற்கு உடன்குடி வெற்றிலைக்கு வெளியிடங்களில் நல்ல மவுசு உண்டு. உடன்குடி பகுதிகளில் உள்ள நிலங்களின் காரத்தன்மையினால் வெற்றிலையும் காரத் தன்மையாக இருக்கும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உடன்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் எங்கும் வெற்றிலை கொடிக்கால்களாக காட்சியளிக்கும். தற்போது உடன்குடியில் மெயின் பஜாராக விளங்கும் கீழ பஜார் கூட ஒரு காலத்தில் வெற்றிலை கொடிக்கால்கள்தான். உடன்குடியில் இருந்து வெளியூர்களுக்கு உடன்குடி வெற்றிலை விவசாய சங்கம் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது.
வெற்றிலை விவசாயிகள் சேர்ந்து உடன்குடியில் மிகப்பெரிய சங்கமும், சங்கத்திற்கு சொந்தமான கட்டடமும் வைத்துள்ளனர். அந்த அளவிற்கு வெற்றிலை விவசாயம் செழித்து காணப்பட்டது. குறிப்பாக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு உடன்குடி பகுதியில் இருந்து மாதம் ஒன்றிற்கு சுமார் 20 ஆயிரம் கிலோவிற்கு அதிகமாக வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 650 கிலோ வெற்றிலை உற்பத்தியானது. தற்போது சீர்காட்சி, நயினார்பத்து மற்றும் ஒரு சில தேரி பகுதிகளில் மட்டுமே வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. வெற்றிலை விவசாயம் செழித்து விளங்கிய நிலங்கள் தற்போது ரியல் எஸ்டேட்களாகவும், பிளாட்டுகளாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. உடன்குடி பகுதி மக்களின் மிக முக்கியமான தொழில்களில் ஒன்று பனைத் தொழில். உடன்குடி கருப்பு கட்டிக்கு தமிழக வியாபாரச் சந்தையில் தனி மவுசு உண்டு. உடன்குடி பகுதிகளில் உள்ள காரத்தன்மை, மணப்பாடு கடல் சிப்பியின் காரத்தன்மை போன்றவற்றினால் உடன்குடி கருப்பு கட்டியின் சுவை மிக அலாதியானது.
மருந்து பொருளாகவும், ஆண்மை வீரியமாகவும் உடன்குடி கருப்பட்டி விளங்கி வந்தது. கற்பக விருச்சமாக விளங்கி வந்த பனை மரங்கள் உடன்குடி பகுதிகளில் கடந்த 1995ம் ஆண்டு கணக்கின்படி சுமார் ஆயிரத்து 790 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 4 லட்சத்து 50 அயிரம் பனை மரங்கள் இருந்தன. ஆனால் பவரு மழை பொய்த்து விட்டதால் போதிய நீர் ஆதாரம் இல்லாமல் பெரும்பாலான பனைமரங்கள் பட்டு விட்டது. மேலும் கடுமையான உடல் உழைப்பு பனைத்தொழிலுக்கு தேவைப்படுகிறது. குறிப்பாக ஒரு நாளைக்கு மூன்று நேரம் பனைமரத்தில் ஏற வேண்டியிருப்பதாலும், கருப்பு கட்டி உற்பத்தி செய்யும் செலவு அதிகமாக இருப்பதாலும், பனைத் தொழிலாளர்கள் கிடைக்காததாலும் பனைத் தொழில் அழியத் துவங்கி விட்டது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பனைத் தொழிலாளர்கள் உடன்குடிக்கு வருகை தருவார்கள். பனைமரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் பயன்பெறும் என்பதால் பனையை வைத்தே ஏராளமான குடும்பங்கள் பிழைத்து வந்தன. பனைத்தொழில் செய்பவர்களுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் அரசு உதவிகள் முறையாக வழங்காததாலும் மெல்ல பனைத் தொழிலும் அழியத் துவங்கிவிட்டது. தற்போது உடன்குடி பகுதியில் சுமார் 2 லட்சம் பனைமரங்கள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது.
காணாமல் போன தோட்ட பயிர்கள், மானாவாரி பயிர்கள் : உடன்குடி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டணம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள சுற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் வீட்டுத் தோட்டப் பயிர்களாக கத்தரிக்காய், மிளகாய், வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய், புடலை, கீரை, அவரை போன்ற விவசாயம் செய்தனர். இதனால் வீட்டு தேவைக்கு போக மீதவுள்ள பொருட்களை விற்று ஓரளவு லாபம் பார்த்தனர். குறிப்பாக குலசேகரன்பட்டணம் கத்தரிக்காய் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றது. கத்தரிக்காய் சீசனில் உடன்குடி பகுதியில் குழம்பு, கூட்டு என முக்கிய பங்கு குலசை கத்தரிக்காய்க்கு இருந்தது. உடன்குடியில் திங்கள் கிழமைதோறும் தூத்துக்குடி மாவட்டத்திலே மிகப்பெரிய வாரச்சந்தை கூடும். அப்போது சுற்றுப்புற பகுதிகளில் உள்ள காய்கறிகள் அனைத்து விற்பனைக்காக வரும். ஆனால் காலப்போக்கில் நிலத்தடி நீரில் ஏற்பட்ட மாற்றத்தினால் உடன்குடி வாரச்சந்தைக்கு வெளியிடங்களில் இருந்து காய்கறி இறக்குமதி செய்யும் அவலநிலையுள்ளது. இதுபோன்று உடன்குடி பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் மணற்பாங்கான பகுதி, ஆண்டுதோறும் பருவ மழை பெய்தவுடன் மானாவாரி பயிர்களான பயிர், கானம், நிலக்கடலை, எள், கம்பு, சோளம் போன்ற பயிர்களை பயிரிடுவார்கள். இதற்கு அதிக அளவு பராமரிப்பு தேவையில்லை. குறைந்த அளவில் அதிகளவு லாபம் சம்பாதித்தனர். இதனால் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வரை உடன்குடி பகுதிகளில் உள்ள வீடுகளில் பயிர் வகைகளே முக்கிய உணவுப்பொருளாக இருந்தது. ஆனால் பருவமழை பொய்த்து விட்டதால் மானாவாரி விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது. தற்போது இந்த நிலங்கள் முட்செடிகள் அடர்ந்து காணப்படுகின்றனர்.
மேலும் உடன்குடி பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் மணற்பாங்கான பகுதியாக இருந்தாலும் இப்பகுதி மக்கள் தங்களது கடுமையான உழைப்பினால் வண்டல் மண் சேர்ந்த ஒன்றும் நிலமாக பாதியளவு விவசாயிகள் மாற்றி வைத்திருக்கின்றனர். இதனால் ஆண்டுக்கு மூன்று முறை நெல் விவசாயமும் சிறந்து விளங்கியது. இதுபோன்று வாழை விவசாயமும் சிறந்து விளங்கியது. நெல், வாழை போன்ற பொருள்கள் வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது நிலத்தடி நீர் மாற்றத்தினால் நெல், வாழை விவசாயம் அழிந்து விட்டது. தென்னை விவசாயம் 80 சதவீதம் பாதிப்பு உடன்குடி பகுதியில் சுமார் ஆயிரத்து 596 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடக்கிறது. ஆனால் இவ்வளவு பரப்பளவில் மரங்கள்தான் இருக்கின்றனவே தவிர வருமானம் முன்பு இருந்ததை விட 80 சதவீதத்திற்கும் மேலாக குறைந்து விட்டது. தென்னை விவசாயத்திற்கு விவசாயிகள் பெரும்பாலும் பம்பு செட் மோட்டாரையே பயன்படுத்தி நீர்பாய்ச்சி வந்தனர். ஆனால் பருவ மழை பொய்த்துவிட்டதாலும், நீர்பிடிப்பு குளங்கள் நிரப்படாததாலும் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு குறைந்துவிட்டது. கடல் நீர் உட்புகுந்துவிட்டது. உப்புநீரினால் செழித்து வளர்ந்த தென்னை மரங்கள் கருகிவிட்டனர். பெரும்பாலான தென்னை மரங்கள் உப்பு நீர் பாய்ச்சுவதால் கொண்டை சிலுத்து உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது.
குறிப்பாக மூடைக்கு 200 தேங்காய் பிடித்தது. ஆனால் தற்போது 600 தேங்காய் மூடைக்கு பிடிக்கிறது. அந்த அளவிற்கு தேங்காயின் அளவு குறைந்து விட்டது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு உடன்குடி பகுதியில் சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்ட தென்னை மரங்களில் 40 நாட்களுக்கு ஒருமுறை சுமார் 1 கோடியே 50 லட்சம் தேங்காய் விளைச்சல் கிடைத்தது. இந்த தேங்காய்கள் உடன்குடி வாரச்சந்தையில் வைத்து விற்பனை செய்யப்படும். இதை வாங்க நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தருவர். பெரும்பாலும் உடன்குடி பகுதியில் விளையும் தேங்காயில் நல்ல எண்ணெய் சத்து இருப்பதால் இந்த தேங்காய்க்கு நல்ல மவுசு இருந்தது. தற்போது தேங்காய் உற்பத்தி பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தோட்டங்களில் உள்ள தென்னை மரங்கள் வெட்டி விற்பனை செய்யும் பரிதாப நிலையுள்ளது.
எனவே அதிகாரிகளின் குளறுபடியான இத்திட்டத்தினால் சடையநேரி கால்வாய் திட்டத்தினால் முழுமையான தண்ணீர் கிடைக்கவில்லை. கால்வாய் குளத்திற்கு தண்ணீர் செல்லாமல் தனிக்கால்வாய் அமைத்து சடையநேரி குளத்திற்கு தண்ணீர் விடவேண்டும். மேலும் மழைக்காலங்களில் மட்டுமே இக்கால்வாயில் தண்ணீர் வருகிறுது.
ஒரு குடம் குடிநீர் ரூ.4 : உடன்குடி பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால் குடிநீருக்கு பெரும்பாலும் கிராம மக்கள் உடன்குடி - சாத்தான்குளம் கூட்டு குடிநீர் திட்டம், எல்லப்பநாயக்கர் குளத்தில் இருந்து கிடைக்கும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.சில நாட்களில் குடிநீர் கிடைக்காவிட்டால் தனியார் வாகனங்களில் ஒரு குடம் குடிநீர் ரூ.4க்கும், ஒரு ட்ரம் ரூ.50க்கும் விலைகொடுத்து குடித்து வருகின்றனர். குறிப்பாக விசேஷ காலங்களில் அதிகளவு குடிநீர் விலை கொடுத்தால் பொதுமக்கள் வாங்கி பயன்பெறுகின்றனர்.சில கிராமங்களில் உப்பான நீரை பயன்படுத்தியதால் சிறுநீரக கல் அடைப்பு, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. உப்பான நீரை மாற்ற பருவ மழையும், நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சியை போக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் : உடன்குடி பகுதிகளில் உள்ள கல்லாநேரி, புல்லாநேரி, செம்மறிகுளம், சடையநேரிகுளம், தாங்கைகுளம், குலசை தருவைகுளம் ஆகிய குளங்களை தூர்வாரி மழைக்காலங்களில் முழுவதும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சடையநேரி கால்வாயில் கால்வாய் குளத்திற்கு செல்லாமல் தனிக்கால்வாய் அமைத்து இக்கால்வாயை நிரந்தர கால்வாயாக அறிவிக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வீணாக கடலுக்குச் செல்லும் நீரை சடையநேரி கால்வாயில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய நீர்பிடிப்பு குளங்களை அமைக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
உடன்குடி அனல்மின் பணிகள் : வந்தாரை வாழவைத்த உடன்குடி பகுதி மக்கள் பிழைப்பதற்காக ஒவ்வொரு இடங்களுக்குச் செல்லும் அவலநிலையுள்ளது. விவசாயத்தை தவிர தொழிற்சாலை எதும் இல்லாததே இதற்கு காரணம். இந்நிலையில் கடந்த அரசு உடன்குடி அனல்மின் நிலைய திட்டப்பணிகளை அறிவித்தது. உடன்குடி பகுதி மக்களின் வாழ்க்கை தரம் உயர நல்ல திட்டமாக உள்ள அனல்மின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை வேண்டும். மேலும் தனியார் நிறுவனம் மூலம் துறைமுகம் அமைக்கும் பணியையும் விரைவுப்படுத்த வேண்டும். முற்றிலும் தனது அடையாளங்களை இழந்து வரும் உடன்குடி புத்துயிர் பெற வேண்டும் என்றால் நிலத்தடி நீர் மாற்றம் ஏற்பட வேண்டும். கடந்த காலங்களில் குலசையில் மிகப்பெரிய சீனி ஆலையும், ரயில் போக்குவரத்தும் உடன்குடியில் இருந்தது. காலப்போக்கில் மறைந்து விட்டது. தற்போது உடன்குடி பகுதியில் மீண்டும் பெரிய தொழிற்சாலையும், ரயில் போக்குவரத்தும் துவங்க வேண்டும், அரசு கல்லூரியும், தீயணைப்பு நிலையம், உடன்குடியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் இவாறு பல்வேறு கனவுகளுடன் உடன்குடி பகுதி மக்கள் உள்ளனர்.