Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கண்மாய் பராமரிப்பு திட்டத்தில் முறைகேடு

கண்மாய் பராமரிப்பு திட்டத்தில் முறைகேடு

கண்மாய் பராமரிப்பு திட்டத்தில் முறைகேடு

கண்மாய் பராமரிப்பு திட்டத்தில் முறைகேடு

ADDED : ஆக 05, 2011 10:29 PM


Google News
சிவகங்கை:கண்மாய் பராமரிப்பில் நடந்த முறைகேட்டை அரசு விசாரிக்க வேண்டும் என அரசுக்கு மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் 640 கண்மாய்களும், ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் 2,774 கண்மாய்களும் உள்ளன. இவற்றில் பூவந்தி, மார்நாடு, கானூர், முத்துக்கோட்டை, கட்டிக்குளம், எமேனேஸ்வரம், நெட்டூர் பகுதியில் 12 க்கும் மேற்பட்ட பெரிய கண்மாய்கள் உள்ளன. இது தவிர சிறு கண்மாய்கள், சிறு குளங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள கண்மாய்கள் மூலம் 61 ஆயிரத்து 11 எக்டேர் நிலங்களும், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டிலுள்ள கண்மாய்களின் கீழ் 73 ஆயிரத்து 912 எக்டேர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.நெல், கரும்பு, வாழை,மற்றும் கடலை, அவரை, துவரை உள்ளிட்டவைகளும்,மற்றும் தோட்டப்பயிர்களான காய்கறி சாகுபடியும் செய்யப்படுகிறது.வறட்சி மாவட்டமான சிவகங்கையில் உள்ள நீர் ஆதாரமான கண்மாய்களை பராமரிக்க வேண்டியது பொதுப்பணித்துறை, யூனியன்களின் பொறுப்பாகும். பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டிலுள்ள கண்மாய்களை பராமரிக்க உலக வங்கி திட்டம், நபார்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்த நிதி கான்ட்ராக்டர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளின் பையை நிறைக்கவே பற்றாக்குறையாக உள்ளது. உலக வங்கி திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் கண்மாயில் மடை கட்டுதல், தூர்வாருவதல், கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டால் மீண்டும் அந்த கண்மாய்க்கு 15 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்ட பெரிய கண்மாய்களின் நிலைமையோ படு மோசம்.மாவட்டத்தின் கடைசி பகுதியான தேவகோட்டையை அடுத்த மார்நாடு பெரிய கண்மாய் தூர்ந்து போகும் நிலையில் உள்ளது. கண்மாயின் நான்கு மடைகளான உடையனவயல் மடை, பெரிய மடை, சின்ன மடை, பூச்சி மடையின் வழியாக உடையனவயல் கிராமம், கள்ளிகுடி, பூத்துரணி, பூதங்குடி, வால்ராமாணிக்கம், தங்ககுடி, கிழவன்குடி, மேட்டுவயல், கல்லூரணி, நெடுமானி வயல், மணிகரம்பை, பெத்தபெருமாள் கோட்டை, கோடகுடி, ஆனையடி கோடகுடி, நாகைமங்கலம் உள்ளிட்ட 95 கண்மாய்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இந்த கண்மாயை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பொதுப்பணித்துறை பராமரிப்பு செய்ததற்கு நிதி செலவு செய்யப்பட்டது. ஆனால் இந்த கண்மாயின் தற்போதைய நிலை படு மோசமாக உள்ளது.

விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிமூலம் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கண்மாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிப்பது கிடையாது. இங்கு கட்டப்படும் மடைகள் கட்டி ஆறு மாதத்திற்குள் தூர்ந்து போகின்றன. வேலைக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுப்பதற்கே பற்றாக்குறையாக உள்ளது. உலக வங்கி திட்டத்தில் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடந்துள்ளது குறித்து மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுத்துள்ளோம். இத்திட்டத்தில் கான்ட்ராக்டர்களின் உதவியுடன் அதிகாரிகள் பல கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனர். கண்மாய் நிதி செலவு செய்ததில் முந்தைய தி.மு.க., அரசிற்கு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலர் துணை போன விபரங்கள் வெளிவரும்.

தமிழக அரசு விசாரணை செய்தால் மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்திற்கு வரும்.'' என்றார்.விவசாயி காளிமுத்து கூறுகையில்,'' மார்நாடு கண்மாய் எட்டு கி.மீ., மேல் பரப்பளவு கொண்டது. அதிகாரிகள் முறையாக பராமரிப்பு செய்யாததால் தூர்ந்து போகும் நிலையில் உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன் கண்மாய் கரையை பலப்படுத்தும் பணி நடந்தது. தற்போது கரை உடையும் நிலையில் தான் உள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்க வழங்கும் நிதியை அதிகாரிகள் தங்களது பாக்கெட்டை நிறைப்பதற்கு ஏற்ப திட்டங்களை போட்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். முறையாக நிதி பயன்படுத்தப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us