"நிலைய அலுவலர் பதவி உயர்வு வேண்டும்' : தீயணைப்பு ஓட்டுனர்கள் கோரிக்கை
"நிலைய அலுவலர் பதவி உயர்வு வேண்டும்' : தீயணைப்பு ஓட்டுனர்கள் கோரிக்கை
"நிலைய அலுவலர் பதவி உயர்வு வேண்டும்' : தீயணைப்பு ஓட்டுனர்கள் கோரிக்கை
ADDED : ஆக 18, 2011 12:09 AM
சென்னை : பணி மூப்பு அடிப்படையில், தங்களுக்கு மட்டும் பதவி உயர்வு
மறுக்கப்படுவதாக, தீயணைப்புத் துறை ஓட்டுனர்கள் புலம்பி வருகின்றனர்.
பேரிடர், விபத்து, தீ விபத்துக் காலங்களில், முன்னணியில் நின்று மக்களுக்கு
உதவி செய்வோர், தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்கள். தீயணைப்புத் துறையின்
இயக்குனர் பதவியைத் தவிர மற்ற அனைவரும், அத்துறைக்கென தனியாக தேர்வு
செய்யப்பட்டவர்கள், பதவி மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு முறையும் போலீஸ் துறைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும் போது,
தீயணைப்புத் துறைக்கும் தேர்வு செய்யப்பட்டு, உரிய இடங்களில்
பயிற்சியளிக்கப்படுகிறது. தீயணைப்புத் துறையில் தேர்வு செய்யப்படுவோர்,
தீயணைப்பாளராகத் தான் முதலில் நியமிக்கப்படுகின்றனர். தொடர்ந்து, ஓட்டுனர்
பயிற்சி முடித்தவர்கள், தீயணைப்பு ஓட்டுனராக நியமிக்கப்படுகின்றனர்.
மற்றவர்கள், முன்னணி தீயணைப்பாளராகவும், பிறகு, நிலைய அலுவலராகவும் பதவி
உயர்வு பெறுகின்றனர். ஆனால், அதே தகுதியுடைய தீயணைப்பு ஓட்டுனர்களுக்கு,
பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. இதனால், தகுதியிருந்தும் பலர், 35
ஆண்டுகளாக ஓட்டுனராகவே இருந்து, ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
போலீசை பொறுத்தவரை, காவலராக சேர்ந்தவர்கள் படிப்படியாக பதவி உயர்வு பெறுவது
போல, போலீசில், ஓட்டுனர்களுக்கும் பதவி உயர்வு நடைமுறை
பின்பற்றப்படுகிறது. அதே போல், தீயணைப்புத் துறையிலும், தமிழகம் முழுவதும்
சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க பரிசீலிக்க வேண்டும். நிலைய
அலுவலர் பதவி உயர்வு அல்லது நிலைய அலுவலர்களுக்கான அந்தஸ்து சம்பளம் வழங்க
வேண்டும் என, தீயணைப்பு ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டுனர்களுக்கு நிலைய அலுவலர் பதவி உயர்வு இல்லாததால், ஓட்டுனர் பதவிக்கு
வர, பலர் விரும்புவதில்லை. இதனால், 400 ஓட்டுனர் பதவியிடங்கள் காலியாக
உள்ளதோடு, ஓட்டுனர்களுக்கான வேலைப் பளுவும் அதிகரித்துள்ளது. 'நிலைய
அலுவலர் பதவி உயர்வு இருக்கும் பட்சத்தில், புதிதாக சேருபவர்களும் ஓட்டுனர்
பதவிக்கு வருவர்' என, பதவி உயர்வுக்காக ஏங்கியிருக்கும் தீயணைப்பு
ஓட்டுனர் தரப்பில் கூறப்படுகிறது; செய்வரா?
- நமது சிறப்பு நிருபர்-


