பிரான்சுடன் கடாபி அரசு பேச்சுவார்த்தை
பிரான்சுடன் கடாபி அரசு பேச்சுவார்த்தை
பிரான்சுடன் கடாபி அரசு பேச்சுவார்த்தை

டிரிபோலி : பிரான்சு நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, லிபியா தலைவர் கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரான்சு நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக, கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் கூறியிருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியில், 'கிளர்ச்சியாளர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. பிரான்சு நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். எங்களது பிரதிநிதி பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை சந்தித்து பேசினார். அப்போது, தேசிய ஆட்சி மாற்றக் கவுன்சிலை நாங்கள் தான் உருவாக்கினோம். எங்களுடைய ஆதரவு இல்லாமல், பணம் மற்றும் ஆயுதங்கள் இல்லாமல் கிளர்ச்சியாளர்களால் நீடிக்க முடியாது. டிரிபோலியுடன் ஒப்பந்தம் ஏற்படும் போது, போரை வாபஸ் பெறும்படி நாங்கள் கிளர்ச்சியாளர்களை கட்டாயப்படுத்துவோம்' என்று பிரான்சு அதிபர் சர்கோசி கூறியதாக, கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
'லிபியாவில், கடாபி அரசுடன் கிளர்ச்சியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடாபி தோற்கும் வரை காத்திருக்கக் கூடாது. லிபியா தலைவரும் பதவியை விட்டு இறங்க வேண்டும். இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று பிரான்ஸ் ராணுவ அமைச்சர் ஜெரார்டு லாங்கியூட் கூறிய சில மணி நேரங்களில், கடாபியின் மகன் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
இதற்கு எழுத்துபூர்வமாக அமெரிக்கா அளித்துள்ள பதிலில், 'ஆட்சி மாற்றம் எப்படி ஏற்பட வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் கிளர்ச்சியாளர்கள். கடாபி பதவியில் நீடிக்கக் கூடாது என்பதில், நாங்கள் உறுதியாக உள்ளோம்' என்று தெரிவித்துள்ளது.