நகை பறித்த கொள்ளையர்களுடன் போராடிய வியாபாரி
நகை பறித்த கொள்ளையர்களுடன் போராடிய வியாபாரி
நகை பறித்த கொள்ளையர்களுடன் போராடிய வியாபாரி
UPDATED : ஆக 17, 2011 01:07 AM
ADDED : ஆக 16, 2011 11:55 PM

ஆவடி:தன்னிடம் உள்ள பொருள் அல்லது பணத்தை மர்ம நபர்கள் பறிக்கும் போது, அதைக் காப்பாற்ற, முடிந்தவரை போராடுவது மனித இயல்பு. அதன் மூலம் இழப்பை மட்டுமல்ல; கண் எதிரில் நடக்கும் குற்றத்தை தடுக்கும் உணர்வும் மேலோங்குகிறது.இன்றைய அவசர உலகில் சட்ட விரோதமாக அரங்கேறும் அது போன்ற எந்த செயலையும் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டியது அவசியம் என்பதை, கொள்ளையர்களுடன் போராடி, நகையை இழந்தாலும் மனைவியை காப்பாற்றிய பரபரப்பான சம்பவம், ஆவடியில் நடந்துள்ளது. சென்னை ஆவடி அடுத்த வெள்ளானூர் பிரியதர்சினி நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 28. இவரது மனைவி சரண்யா, 26. இவர்களுக்கு ரஞ்சித் என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. இவர் வீட்டருகே ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி இரவு, டூவீலரில் தனது மனைவியுடன் ஆவடிக்கு சென்றார். சி.ஆர்.பி.எப்., சாலையில் சென்ற போது, 'நேவி கேட்' அருகே அவர்களை தொடர்ந்து மற்றொரு டூவீலரில் வந்த இருவர், ராதாகிருஷ்ணன் டூவீலர் மீது மோதினர்.
இதில் நிலை தடுமாறி அவர்கள் விழுந்ததும், சரண்யா அணிந்திருந்த நகையை பறித்தனர். இதில், ராதாகிருஷ்ணன் நகையை மீட்க அவர்களுடன் போராடினார். ஆனாலும் அவர்கள் தப்பினர். மர்ம நபர்கள் வந்த டூவீலரின் நம்பர் பிளேட்டை ராதாகிருஷ்ணன் கைப்பற்றினார். இது குறித்து அவர், ஆவடி டேங்க் பேக்டரி போலீசாரிடம் புகார் செய்தார். பதிவு எண் மூலம் மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கொள்ளையர்களிடம் இருந்து நகையை மீட்கப் போராடிய காட்சியை பரபரப்பாக விளக்கினார் ராதாகிருஷ்ணன்.
''ஆவடியில் உள்ள பேன்சி ஸ்டோரில் சில பொருட்கள் வாங்குவதற்காக நானும், என் மனைவியும் 13ம் இரவு 8.30 மணிக்கு, வீட்டிலிருந்து டூவீலரில் புறப்பட்டோம். சி.ஆர்.பி.எப்., சாலையில், 'நேவி கேட்' அருகே எங்களை உரசுவது போல், மற்றொரு டூவீலரில் இருவர் வந்தனர். அவர்கள் எங்கள் மீது மோதி விடாமல் இருக்க நான், வேகத்தைக் குறைக்க முயற்சித்த போது, அவர்கள் கத்திக் கொண்டே என் மனைவி அணிந்திருந்த நகைகளில் ஒரு செயினை பறித்தனர்.
அதற்குள் நிலை தடுமாறி கீழே விழுந்தோம். ஆஜானுபாகுவான முரட்டுத் தோற்றத்தில் இருந்த இருவரும், என் மனைவியின் கழுத்தில் இருந்து மற்றொரு செயினையும் பறிக்க முயற்சித்தனர். நான் என் மனைவியை காப்பாற்ற, அவர்களுடன் போராடினேன். இதில், எங்கள் இருவருக்கும் கை, கால், 10 நிமிட போராட்டத்திற்குப் பின், அந்த வழியாக போலீஸ் போல் காணப்பட்ட ஒருவர் டூவீலரில் வந்தார். அப்போது, கொள்ளையர்கள் குடும்ப சண்டை போல் குரல் கொடுத்தனர்.அதையும் மீறி எனது மனைவி, 'அண்ணா காப்பாத்துங்க... காப்பாத்துங்க' என்று குரல் கொடுத்ததால், சில அடி தூரம் சென்ற அந்த நபர் டூவீலரின் வேகத்தைக் குறைத்து, 'டேய் நிறுத்துங்கடா... யார்ரா நீங்க' என்று கேட்டதும், அவர்கள் டூவீலரை எடுத்துக் கொண்டு தப்பிக்க முயற்சித்தனர்.
ஆனால், நான் விடாமல் அவர்களது டூவீலரின் பின் கம்பியை (பில்லியன்) பிடித்து, பலம் கொண்டு தூக்கினேன். வண்டியின் வேகத்தால், அவர்கள் நிலை தடுமாறி விழுந்தனர். இதில், அவர்களது வண்டியின் முன்பக்க நம்பர் பிளேட் உடைந்து கீழே விழுந்தது. சம்பவத்தை தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த அந்த நபர் அப்போதும் உதவிக்கு வரவில்லை.மீண்டும் அவர்கள் எழுந்து வண்டியை எடுத்தபோது, நான் அந்த வண்டியின் சாவியை பறித்துக் கொண்டேன். ஆனாலும் அவர்கள், 'ஸ்டார்ட்' செய்து ராணுவ வாகனங்கள் பயிற்சி மேற்கொள்ளும் மைதானம் வழியாக நுழைந்து தப்பினர்.
இதையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையம் மற்றும் கட்டுப்பாட்டறைக்கு போன் செய்து, தகவல் சொன்னேன். அடுத்து என் தம்பிக்கு போன் செய்து, உதவிக்கு அழைத்தேன். சம்பவத்தின் போது போலீஸ் போல் காணப்பட்ட ஒருவர் அங்கு வராமல் இருந்திருந்தால், பலசாலிகளாக இருந்த அவர்கள், நகைக்காக எங்களை கொலையும் செய்திருப்பார்கள். அதிர்ஷ்டவசமாக 11 சவரன் நகை மட்டுமே பறிபோனது.வியாபாரத் தேவைக்காக பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் தப்பியது. வழக்கமாக குழந்தையை எங்களுடன் அழைத்துச் செல்வோம். அன்று, என் தம்பியின் வீட்டில் விட்டுச் சென்றோம். ஆண்டவன் அருளால் நாங்கள் உயிர் பிழைத்தோம்,'' என்று தனது திக்... திக்... அனுபவத்தை தெரிவித்தார் ராதாகிருஷ்ணன்.
இருவர் சிக்கினர்:நகை பறிப்பு தொடர்பாக வெள்ளானூர் அருகே உள்ள ஆரிக்கம்பேடு, பம்மதுகுளம் கிராமங்களைச் சேர்ந்த இருவர், ஆவடி டேங்க் பேக்டரி போலீசாரிடம் சிக்கியுள்ளனர். விசாரணையில் சம்பவத்தன்று அப்பகுதி சாலையோரம் உள்ள சிமென்ட் கட்டையின் மீது அமர்ந்து, மது அருந்திக் கொண்டு இருந்திருக்கின்றனர்.அந்த வழியாக ராதாகிருஷ்ணன் மனைவியுடன் டூவீலரில் வந்ததையும், தங்களைத் தவிர மற்றவர்களின் நடமாட்டமில்லாத, இருள் சூழ்ந்த நிலையை சாதமாக்கிக் கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் பழைய குற்றவாளிகள் என்றும் கூறப்படுகிறது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அ.ஜமால் மொய்தீன்