/உள்ளூர் செய்திகள்/திருச்சி/துறையூர் பெருமாள்மலையில் புரட்டாசி சனி உற்சவ விழாதுறையூர் பெருமாள்மலையில் புரட்டாசி சனி உற்சவ விழா
துறையூர் பெருமாள்மலையில் புரட்டாசி சனி உற்சவ விழா
துறையூர் பெருமாள்மலையில் புரட்டாசி சனி உற்சவ விழா
துறையூர் பெருமாள்மலையில் புரட்டாசி சனி உற்சவ விழா
ADDED : செப் 24, 2011 01:00 AM
துறையூர்: துறையூர் பெருமாள்மலையில் புரட்டாசி மாத சனிக்கிழமை உற்சவ விழா
இன்று துவங்குகிறது. 'மலை மீது செல்லும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள
கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்' என கோவில் நிர்வாகம்
கேட்டுக்கொண்டுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரில், 'தென் திருப்பதி' என
பக்தர்களால் கருதப்படும் பெருமாள்மலை மீது ஸ்ரீதேவி பூதேவி ஸமேத பிரஸன்ன
வெங்கடாஜலபதி திருக்கோவில் கொண்டு எழுந்தருளி ஸேவை சாதிக்கிறார். இங்கு
புரட்டாசி சனிக்கிழமை உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இக்கோவிலில் நடக்கும் விழாவில் சுற்று வட்டார மக்கள், கோவில் குடிபாட்டு
பக்தர்கள் மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்து
வைஷ்ணவ பக்தர்கள் திரளாக வந்து தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி
எம்பெருமாளை வணங்கிச் செல்வர். இக்கோவிலில் உள்ள கருப்பண்ணார் சந்நிதியில்
விபூதி பிரசாதம் வழங்கப்படுவதால் சைவ மரபினரும் வந்து வழிபடுவதும்,
இசைத்தூண்கள் அமைந்திருப்பதும், 10 அவதார கருங்கற் சிற்பங்கள் எழிலுடன்
அமைந்திருப்பது அனைவரையும் கவரும் சிறப்பாகும். மலை மீதுள்ள இக்கோவிலுக்கு
1,564 படிக்கட்டுகள் வழியாகவும், ஐந்து கி.மீ., நீளமுள்ள மலைப்பாதையை
வாகனங்கள் மூலமும் செல்லலாம். உற்சவ விழா புரட்டாசி மாத ஐந்து சனிக்கிழமை
நடக்கவுள்ளது. விழாவின் முதல்வாரம் இன்று துவங்குகிறது. அதிகாலை ஐந்து மணி
முதல் இரவு வரை அலங்கரிக்கப்பட்ட மூலவர், உற்சவர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு
வழிபாடு நடக்கும். அக்., முதல் தேதி இரண்டாவது வாரம், அக்., எட்டாம் தேதி
மூன்றாவது வாரம், அக்., 15ம் தேதி நான்காவது வாரம், அக்., 22ம் தேதி
ஐந்தாவது வார உற்சவ விழா நடைபெறும். * வாகனங்களுக்கு கட்டுப்பாடு:
பக்தர்களின் பாதுகாப்புக்காக மலை மீது ஏறும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
விதிக்கப்பட்டுள்ளது. மலை ஏற வரும் பயணிகள் வாகனங்கள் உரிய ஆவணம் இருந்தால்
தான் அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவது இல்லை.
கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டுமென கோவில் நிர்வாகம்
கேட்டுக்கொண்டுள்ளது.