மசோதா நிறைவேறும் வரை நான் சாகமாட்டேன்: ஹசாரே நம்பிக்கை
மசோதா நிறைவேறும் வரை நான் சாகமாட்டேன்: ஹசாரே நம்பிக்கை
மசோதா நிறைவேறும் வரை நான் சாகமாட்டேன்: ஹசாரே நம்பிக்கை
ADDED : ஆக 25, 2011 11:17 PM

புதுடில்லி: ''என் உடல் நிலை குறித்து, யாரும் கவலைப்பட வேண்டாம். பலமான லோக்பால் மசோதா நிறைவேறும் வரை, நான் இறக்க மாட்டேன்,'' என, காந்தியவாதி அன்னா ஹசாரே பேசினார். ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரே, நேற்று மிகவும் களைப்பாக காணப்பட்டார். நேற்று காலையில் மேடையில் தோன்றிய அவர், அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி, 'பாரத் மாதா கி ஜே' என, தொடர்ந்து மூன்று முறை, உரக்க குரல் கொடுத்தார். அங்கு கூடியிருந்த மக்களும் திரும்ப கோஷமிட்டனர்.
இதன் பின், அவர் பேசியதாவது: டாக்டர்கள் என்னை பரிசோதித்தனர். உடல் எடை, 6.5 கிலோ குறைந்து விட்டது. மற்றபடி பயப்படும்படியாக எதுவும் இல்லை. கடவுளின் ஆசியால், உங்களிடம் இருந்து எனக்கு சக்தி கிடைக்கிறது. அதனால், பிரச்னை இல்லை. பலமான லோக்பால் மசோதா, பார்லிமென்டில் நிறைவேறும் வரை, நான் இறக்க மாட்டேன். எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஹசாரே பேசினார்.
டாக்டர்கள் கூறுவது என்ன? : ஹசாரேயை நேற்று பரிசோதித்த டாக்டர் நரேஷ் டிரெகான் கூறுகையில், 'ஹசாரேயின் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அளவு வழக்கம் போல் உள்ளது. இருந்தாலும், கடந்த 10 நாட்களாக சாப்பிடாமல் இருப்பதால், அவரது உடல் நிலை பாதிக்கப்படும். இதுவரை எந்த பிரச்னையும் இல்லை என்றாலும், 24 மணி நேரமும், அவரது உடல் நிலையை கண்காணித்து வருகிறோம்' என்றார்.
காங்., பொதுச் செயலர் ராகுல் :லோக்பால் மசோதா விவகாரத்துக்காக ஹசாரே தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதன் காரணமாக, பார்லிமென்டில் அமளி நிலவுவது கவலை அளிப்பதாக உள்ளது.
டில்லி நோக்கி பேரணி : ஹசாரே குழு : 'லோக்பால் மசோதா பிரச்னைக்கு, மத்திய அரசு சரியான தீர்வு காணாவிட்டால், நாடு முழுவதிலும் இருந்து, டில்லியை நோக்கி பொதுமக்கள் பேரணி நடத்துவர்' என, ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர். ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: லோக்பால் விவகாரத்தில், வரும் 27ம் தேதி (நாளை)க்குள் சரியான தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில், நாடு முழுவதும் இருந்து, டில்லியை நோக்கி மக்கள் பிரமாண்ட பேரணியை நடத்துவர். நாளை நடக்கும் இந்த பேரணி, அமைதியான முறையில் நடத்தப்படும். லோக்பால் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரை, மக்கள் அனைவரும், டில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவர். லோக்பால் விவகாரத்தில், தங்களின் பிரச்னை என்ன என்பது குறித்து, அரசு தரப்பு, எழுத்து மூலம் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அந்த பிரச்னை குறித்து, நாங்கள் விவாதித்து, ஒருமித்த கருத்தை உருவாக்கி, அதை அரசுக்கு அனுப்பி வைப்போம். இதன்பின், இரு தரப்பும் பேச்சு நடத்தலாம். மற்ற அரசியல் கட்சிகளுடனும், லோக்பால் குறித்து பேச்சு நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.