இலவச "லேப்-டாப்' கேட்ட 154 கல்லூரி மாணவர்கள் கைது
இலவச "லேப்-டாப்' கேட்ட 154 கல்லூரி மாணவர்கள் கைது
இலவச "லேப்-டாப்' கேட்ட 154 கல்லூரி மாணவர்கள் கைது
கோவை:முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், 'லேப்-டாப்' கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், இரண்டாவது நாளாக, நேற்றும் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நிஜமாகவே லேப்-டாப் கம்ப்யூட்டர் தேவைப்படும் எம்.சி.ஏ., உள்ளிட்ட முதுநிலைப் பட்ட மாணவர்கள், இத்திட்டத்தில் உட்படுத்தப்படாதது, மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.முதல்வருக்கு மாணவ, மாணவியர் அனுப்பியுள்ள மனுவில், 'அறிவிக்கப்பட்ட இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் எங்களுக்கும் கிடைக்கும் என, நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், எங்களை திட்டத்தில் உட்படுத்தாதது ஏமாற்றமும் வேதனையும் அளிக்கிறது. எங்களைப் போன்ற முதுநிலை மாணவர்களுக்கு லேப்-டாப் அத்தியாவசிய தேவையாக உள்ளது. இறுதியாண்டு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க கம்ப்யூட்டர் அவசியம்.
அரசு முதல் கட்டமாக வழங்கும் லேப்-டாப் கம்ப்யூட்டரை, அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு முன்னுரிமை தந்து வழங்க வேண்டுகிறோம்' என கூறிஉள்ளனர்.லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கக் கோரி இரண்டாவது நாளாக நேற்றும் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுடன் ஆர்.டி.ஓ., சாந்தகுமார் மற்றும் போலீசார் பல முறை பேச்சு நடத்தியும், கலைந்து போக மறுத்தனர். இதையடுத்து, 43 மாணவியர் உட்பட 154 பேரையும் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்களை விடுவித்தனர்.