Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கூடன்குளம் அணுமின் நிலையம் மூடக் கோரி 6வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

கூடன்குளம் அணுமின் நிலையம் மூடக் கோரி 6வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

கூடன்குளம் அணுமின் நிலையம் மூடக் கோரி 6வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

கூடன்குளம் அணுமின் நிலையம் மூடக் கோரி 6வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

ADDED : செப் 17, 2011 02:51 AM


Google News

களக்காடு : கூடன்குளத்தில் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நேற்று 6வது நாளாக இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இதில் 3 பேர் திடீரென மயக்கமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடிந்தகரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் கடந்த 11ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர் உண்ணாவிரத போராட்டம் இருந்தவர்களிடம் மாவட்ட நிர்வாகம் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் முன்வரவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக அமைச்சர்கள் செந்தூர்பாண்டியன், சண்முகநாதன், செல்லப்பாண்டியன் மற்றும் எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து நேற்று ஆறாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடிந்தகரை, கூடன்குளம் மற்றும் கடலோர கிராம மக்கள் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். அம்மையப்பா கல்லூரி மற்றும் டான்போஸ்கோ பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு கூறுகையில்,''அணுஉலை ஆபத்து நிறைந்தது என்பதால் வெளிநாட்டில் புதிய அணுஉலை அமைக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். ஜப்பான், ரஷ்யா, சீனா போன்ற பல்வேறு நாடுகள் புதிய அணுஉலை திறக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் புதிய அணுஉலை அமைக்க வேண்டிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கூடன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இங்கு அணு கசிவு ஏற்பட்டால் கொடிய நோய்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.இதனால் புல்பூண்டுகள் முளைக்காமல் இப்பகுதி பாலைவனமாக மாறிவிடும். மீன்பிடிப்பு பாதிக்கப்படும். 127 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்கு தினமும் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர். இவர்கள் உயிரை காப்பாற்ற இப்பகுதியில் அணுஉலையை நிறுவ வேண்டாம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.



உண்ணாவிரதத்தில் அணுஉலை எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், அண்டன் கோமாஸ், கவுன்சிலர் சாண்டல் முத்துராஜ், ராதாபுரம் எம்எல்ஏ மைக்கேல்ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் உண்ணாவிரதம் முடியும் நிலையில் சிலுவை நட்சத்திரம் (50) என்ற பெண்மணி திடீரென மயங்கி விழுந்தார். இவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஏற்கனவே காலையில் இரண்டு பேர் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா கூடன்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பான முறையில் கட்டப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு உண்ணாவிரதம் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். 7வது நாளாக இன்று (17ம் தேதி) தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us