ஒப்பந்தத்தை மீறிய கட்டுமான நிறுவனம்பாதிக்கப்பட்டவருக்கு 9 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு
ஒப்பந்தத்தை மீறிய கட்டுமான நிறுவனம்பாதிக்கப்பட்டவருக்கு 9 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு
ஒப்பந்தத்தை மீறிய கட்டுமான நிறுவனம்பாதிக்கப்பட்டவருக்கு 9 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு
ADDED : செப் 14, 2011 01:23 AM
சென்னை: ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்ட கட்டுமான நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவருக்கு, ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காரைக்கால், சர்ச் தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவர், சென்னை, சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள, சித்ரா கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன் என்பவருக்கு எதிராக, நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:சூளைமேடு, சித்ரா நிழற்சாலையில், 1810 சதுர அடி இடத்தில் வீடு கட்டித் தருவது தொடர்பாக, கடந்த 2000 செப்டம்பரில், எதிர்மனுதாரர் என்னுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இடம் மற்றும் கட்டுமானத்திற்கு, 25 லட்சத்து 50 ஆயிரத்து 560 ரூபாய் கேட்டனர்.இதில், ஐந்து லட்சத்து 50 ஆயிரத்து 560 ரூபாயை, வீட்டை என்னிடம் ஒப்படைத்த பின் தந்தால் போதுமானது. ஆனால், முழு தொகையையும் முன்கூட்டியே செலுத்தினேன்.ஒப்பந்தப்படி, 2002 மார்ச் 10ம் தேதிக்குள் வீடு கட்டி முடிக்கப்படவில்லை. மேலும், தரையில் பளிங்குக் கல்(மார்பிள்) பதிக்க, ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, 'டைல்ஸ்' பதித்தனர்.மேலும், குடிநீர், கழிவு நீர் மற்றும் மின் இணைப்புகளையும் முழுமையாகப் பெற்றுத் தரவில்லை. விதிமுறை மீறல்களால், 2002 ஜூலையில், வீட்டை இடிக்க சி.எம்.டி.ஏ., 'நோட்டீஸ்' அனுப்பியது. சி.எம்.டி.ஏ., ஒப்புதல்படி, வீட்டை முழுமையாகக் கட்டித் தர வேண்டும். நஷ்ட ஈடாக 11 லட்சத்து 8,524 ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த சென்னை(வடக்கு) நுகர்வோர் கோர்ட் நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில்,'ஒப்பந்த தேதிக்கு 38 மாதங்கள் தாமதமாகக் கட்டி முடிக்கப்பட்ட வீட்டில், சி.எம்.டி.ஏ.,வின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.இதனால், பாதிக்கப்பட்டுள்ள மனுதாரருக்கு, வீட்டை காலதாமதமாகக் கட்டியதற்கு, ஐந்து லட்சத்து 70 ஆயிரம், ஒப்பந்தப்படி கட்டி முடிக்காத பணிகளுக்காக, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு நஷ்ட ஈடாக ஒரு லட்சம் மற்றும் வழக்கு செலவு 1,000 ரூபாய் என, மொத்தம் ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் ரூபாய், எதிர்மனுதாரர் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.


