/உள்ளூர் செய்திகள்/திருச்சி/சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வில் அரங்கேறிய "காமெடி'சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வில் அரங்கேறிய "காமெடி'
சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வில் அரங்கேறிய "காமெடி'
சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வில் அரங்கேறிய "காமெடி'
சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வில் அரங்கேறிய "காமெடி'
ADDED : ஆக 22, 2011 02:27 AM
திருச்சி: திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வில், பல 'காமெடி' காட்சிகள் அரங்கேறியது.
தமிழக பட்ஜெட்டில் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை 100 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிதியை கொண்டு புதிய கட்டிடங்கள் அமைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய், திருச்சி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ய வந்தார். சி.டி., ஸ்கேன் பிரிவை பார்வையிடும்போது, அங்கு நோயாளிகள் யாரும் இல்லை. வெறும் ஸ்கேன் மெஷினை மட்டும் எப்படி பார்வையிடுவது? என்று யோசித்து கொண்டிருந்தபோது, மருத்துவமனை ஊழியர் ஒருவரை நோயாளி ஆக்குவது என முடிவெடுத்தனர். அதைக்கண்ட மாநகர் மாவட்டச்செயலாளர் மனோகரன், 'அவர் ஊழியர் வே ண்டாம்' என்று அவரை தடுத்து விட்டார். அதற்கு அமைச்சர் விஜய், பரவாயில்லை சட்டை கழட்டி விட்டு படுக்க வையுங்கள். அடையாளம் தெரியாது என்று கூறினார். அதன்பின் ஊழியரை நோயாளியாக படுக்க (நடிக்க) வைக்கும் திட்டம் கைவிடப்பட்டு, இயங்காத நிலையில் மெஷினை பார்வையிட்டு அமைச்சர் திருப்தி அடைந்தார்.
அடுத்ததாக, பத்திரிகை போட்டோகிராபர் ஒருவர், அமைச்சரிடம் நேரடியாக சென்று, 'எனக்கு தெரிந்த ஒரு நோயாளியை இங்கே சேர்த்தேன். மூன்று மணி நேரமாக டாக்டர்களே வரவில்லை' என்று புகார் செய்தார். அதற்கு, 'உடனே மருத்துவ கண்காணிப்பாளரை பார்க்க வேண்டியதுதானே' என்று அமைச்சர் எதிர்க்கேள்வி எழுப்பினார். 'நாங்க பார்த்துடலாம்; மக்கள் எங்கே போவாங்க?' என்று போட்டோகிராபர் கேட்டார்.
கோபத்துடன் கேட்ட போட்டோகிராபர் மீது பாய்ந்து, கோழி அமுக்குவதை போல அமுக்கினார் கால்நடைத்துறை அமைச்சர் சிவபதி. 'என்னாண்ணே.. இதெல்லாம் லோக்கல்ல இருக்கிற எங்ககிட்ட சொன்னா போதாதா?' என்றபடி அவரை சமாதானம் செய்து, ஓரம் கட்டினார்.
அவசர சிகிச்சை பிரிவில் நெஞ்சு படபடப்பு என்று அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை, அமைச்சர் டாக்டர் என்பதால் ஸ்டெதஸ்கோப் வை த்து சோதித்து பார்த்தார். நோயாளிக்கு இருதய துடிப்பு தாறுமாறாக உள்ளதாக கூறிய அமைச்சர், அவருக்கு கொடுக்கப்படும் மருந்துகள் குறித்தும், அவை மருத்துவமனையில் இருப்பு உள்ளதா? என்றும் கேட்டறிந்தார்.
அதே மருந்துகளை தொடரும்படி டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர். இதேபோல, டிரையேஜ் (முதல்நிலை) வார்டில் ஒரு நோயாளியையும் அமைச்சர் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினார். அமைச்சர் பரிசோதித்த நோயாளிகளுக்கு கவனிப்பு பலமாக இருப்பதை கண்ட பக்கத்து 'பெட்' நோயாளிகள், நம்மை அமைச்சர் பரிசோதிக்காமல் போய்விட்டாரே? என்று நொந்து போயினர்.
மக்கள் குறை: பிரசவ வார்டுக்கு வெளியே நோயாளிகளுடன் உடன் வருபவர்கள், துணிகளை காய போடுவது, அங்கேயே சிறுநீர் கழிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். பிரசவ வார்டு வழியே வெளியே வந்த அமைச்சர், அங்கிருந்த நின்றிருந்த மக்களை கண்டும் காணாமலேயே சென்றார். அங்கிருந்த மக்களிடம் ஓரிரு வார்த்தை பேசியிருந்தாலே, ஒட்டுமொத்த மருத்துவமனை குறைகளை புட்டு, புட்டு வைத்திருப்பர்.