ஊழல் தடுப்பு துறை சட்ட அமைச்சரிடமே உள்ளது : கருணாநிதிக்கு நிதியமைச்சர் பதிலடி
ஊழல் தடுப்பு துறை சட்ட அமைச்சரிடமே உள்ளது : கருணாநிதிக்கு நிதியமைச்சர் பதிலடி
ஊழல் தடுப்பு துறை சட்ட அமைச்சரிடமே உள்ளது : கருணாநிதிக்கு நிதியமைச்சர் பதிலடி

சென்னை : 'மூன்றாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றதும், ஊழல் தடுப்பு துறை சட்டத்துறை அமைச்சர் வசமே இருந்து வருகிறது' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: தனக்குத் தானே கேள்விகளை கேட்டுக் கொண்டு, அதற்கு பதில்களை அளிப்பதை பொழுது போக்காக கொண்டுள்ள கருணாநிதி, கண் துடைப்பு, கபட நாடகம் எது? என தலைப்பில் மனம் போன போக்கில் சில புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் 2001 முதல் 2006ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போதும், 'ஊழல் தடுப்பு' துறை என் வசம் தான் இருந்தது. உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற பழமொழிக்கேற்ப கூறியுள்ளார். ஆட்சி அதிகாரமும் போய்விட்டது, குடும்ப உறுப்பினர்களும், தனது அமைச்சரவை சகாக்களும் ஒவ்வொருவராக ஜெயிலுக்கு சென்று கொண்டு இருக்கின்றனர் என்ற விரக்தியில் உண்மை விவரங்களை தெரிந்து கொள்ளாமல், உளறலின் உச்சக்கட்டத்திற்கு கருணாநிதி சென்று இருக்கிறார்.
கேரள முதல்வர் மீது விஜிலென்ஸ் குற்றச்சாட்டு எழுந்ததுமே, அத்துறையின் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு விட்டதோடு, விசாரணையை சந்திப்பதாக கருணாநிதி தெரிவித்து இருக்கிறார். தன் மீதுள்ள பல ஊழல் குற்றச்சாட்டுகளை, கோர்ட்டிற்கு சென்று சந்திக்க திராணி இல்லாமல் தனக்குத் தானே நீதிபதியாகச் செயல்பட்டு, அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்ற கருணாநிதி, தன் மகன் அழகிரி சம்பந்தப்பட்ட, தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யாத கருணாநிதி, கேரள முதல்வரை உதாரணம் காட்டி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.