சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூரில் ஆக., 4ல் வேலை நிறுத்தம்
சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூரில் ஆக., 4ல் வேலை நிறுத்தம்
சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூரில் ஆக., 4ல் வேலை நிறுத்தம்
திருப்பூர் : சாய ஆலை பிரச்னையில் முதல்வர் உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூரில் வரும் 4ம் தேதி பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தவர்களுக்கு, மத்திய - மாநில அரசுகள் மானியமாக வழங்கிய 320 கோடி ரூபாய், இன்னும் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கவில்லை. அத்தொகை கிடைத்தால், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' முறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த உதவியாக அமையும். அந்நிதி கிடைக்கச் செய்ய வேண்டும். கண்காணிப்பு குழுக்களை விஸ்தரிப்பு செய்ய வேண்டும். சலவை பட்டறைகள் என்பது கெமிக்கல் அல்ல; சலவை பட்டறைகளை இயக்கினால், உள்நாட்டு தயாரிப்பு வர்த்தகத்தில் வேலை வாய்ப்பை பெற முடியும்.
சாய ஆலை பிரச்னையில் சாய ஆலை உரிமையாளர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், திருப்பூர், பல்லடம், காங்கயம் பகுதி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் அடங்கிய முத்தரப்பினரை அழைத்து பேசி, முதல்வர் இப்பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் ஆக., 4ம் தேதி காலை 6.00 மணி முதல், 5ம் தேதி காலை 6.00 மணி வரை, 24 மணி நேர பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மா.கம்யூ., மாவட்ட செயலர் காமராஜ் கூறுகையில், ''தொழில் பாதிப்பால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். உள்ளூர் மக்களும் வேலை இழந்துள்ளனர். வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளில் கூட வியாபாரமில்லை. இதே நிலை தொடர்ந்தால், திருப்பூரின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார். கூட்டத்தில், மா.கம்யூ., - இந்திய கம்யூ., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., - சமத்துவ மக்கள் கட்சி - மனிதநேய மக்கள் கட்சி - பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.