பாஸ்கோ உருக்காலை திட்டத்திற்காக 6 லட்சம் மரங்கள் வெட்டிச் சாய்ப்பு
பாஸ்கோ உருக்காலை திட்டத்திற்காக 6 லட்சம் மரங்கள் வெட்டிச் சாய்ப்பு
பாஸ்கோ உருக்காலை திட்டத்திற்காக 6 லட்சம் மரங்கள் வெட்டிச் சாய்ப்பு
புவனேஸ்வர் : ஓடிசாவில் பாஸ்கோ உருக்காலை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மூன்று லட்சம் சவுக்கு மரங்கள், பழ மரங்கள், 1,800 வெற்றிலை மற்றும் திராட்சைக் கொடிகள் உள்ளிட்ட, ஆறு லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளன.
இந்நிலையில், பசுமைத் திட்டத்தின் கீழ், அப்பகுதிகளில் தோட்டப் பயிர்களாக மூன்று லட்சம் சவுக்கு மரங்கள், 1,800 வெற்றிலை மற்றும் திராட்சைக் கொடிகள், தோட்டங்களில் தென்னை, பலா, முந்திரி, மாமரங்கள் உள்ளிட்ட ஆறு லட்சம் மரங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. பாஸ்கோ உருக்காலை நிறுவுவதற்காக, இந்த மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களைத் தடுப்பதற்காக, கடற்கரைப் பகுதிகளில் சவுக்கு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது, இம்மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே, இம்மரங்களை வெட்டுவதற்கு, கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்' என்றனர்.
பாஸ்கோ பிரதிரோத் சங்க்ரம் சமிதி என்ற, பாஸ்கோ உருக்கலை திட்ட எதிர்ப்பாளர்கள், கோவிந்தபூர் கிராம எல்லையில், பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு, பாஸ்கோ திட்டப் பணிகளைச் செய்ய வரும், அரசு அதிகாரிகளை அப்பகுதிக்குள் நுழையாமல் தடுத்து வருகின்றனர்.
ஜகத்சிங்பூர் மாவட்ட கலெக்டர் இதுகுறித்துக் கூறுகையில், 'கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக, புதிதாக மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உருக்காலை திட்டத்தை செயல்படுத்தும் கொரியன் நிறுவனமும், தொழிற்சாலைக்கு உள்ளேயும், அதன் சுற்றுப்பகுதிகளிலும் பசுமைத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது' என்றார்.
மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டேபி பிரசாத் மிஸ்ரா இதுகுறித்துக் கூறியதாவது: இப்பகுதியில் உள்ள மரங்களில், பெரும்பாலானவை சவுக்கு மரங்கள். விறகுக்காக இந்த மரங்கள் பயன்படுகின்றன. கடந்த 1999ம் ஆண்டில் ஏற்பட்ட கடும் புயலை அடுத்து, வனத்துறையினர், இப்பகுதியில் மரங்களை வளர்த்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், அவை வெட்டப்படுகின்றன. இம்மரங்களை வெட்டுவதற்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து, முன்பே அனுமதி வாங்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசும், மரம் வெட்டுவதில் முறையான வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடிக்கும். சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட குழு, இது குறித்து ஆய்வு செய்து வருகிறது. வெட்டப்படும் மரங்களால் ஏற்படும் நஷ்டத்திற்கு, உரிய நஷ்டஈடு அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மிஸ்ரா தெரிவித்தார்.