சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பூங்கா அமைக்க முடிவு
சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பூங்கா அமைக்க முடிவு
சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பூங்கா அமைக்க முடிவு
ADDED : ஆக 05, 2011 02:39 AM
சென்னை : அரசு-தனியார் பங்களிப்பில், 50 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட, சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பூங்கா நிறுவப்படும்.
இது குறித்து பட்ஜெட்டில் கூறியுள்ளதாவது:ஆண்டுக்கு 20 ஆயிரம் தெரு விளக்குகள் வீதம், ஆயிரம் கிராமங்களில், 248 கோடி ரூபாய் செலவில் சூரிய சக்தியில் எரியும், ஒரு லட்சம் தெரு விளக்குகள் அமைக்கப்படும்.
இதில் மாநில அரசின் பங்கு, 191 கோடியே ஆறு லட்ச ரூபாய்; மத்திய அரசின் மானியம், 56 கோடியே 40 லட்ச ரூபாய். நடப்பாண்டில், 200 கிராமங்களில் 20 ஆயிரம் தெரு விளக்குகள், சூரிய சக்தியில் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும். இதற்காகும் 49 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில், மத்திய அரசு 11 கோடியே 20 லட்ச ரூபாயும், மாநில அரசு 38 கோடியே 40 லட்ச ரூபாயும் பகிர்ந்து கொள்ளும். அரசு ஏற்கனவே உறுதியளித்தபடி, பசுமை எரிசக்தியை ஊக்குவிக்க, அரசு-தனியார் பங்களிப்பு முறையில், திறந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளைப் பயன்படுத்தி, 50 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட, சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பூங்கா ஒன்றை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் அமைக்கும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.