/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் : தேர்தல் வாக்குறுதி செயல்வடிவம் பெறும்புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் : தேர்தல் வாக்குறுதி செயல்வடிவம் பெறும்
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் : தேர்தல் வாக்குறுதி செயல்வடிவம் பெறும்
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் : தேர்தல் வாக்குறுதி செயல்வடிவம் பெறும்
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் : தேர்தல் வாக்குறுதி செயல்வடிவம் பெறும்
ADDED : ஆக 24, 2011 12:05 AM
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில், முதல்வர் ரங்கசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி துவங்கியது. அன்றைய தினம், சபையில் கவர்னர் இக்பால்சிங் உரையாற்றினார். பின், சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, பட்ஜெட் தாக்கல் செய்கிறார். புதுச்சேரிக்கான திட்ட ஒதுக்கீடாக, நடப்பு ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று திட்டக் கமிஷனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 2750 கோடி ரூபாயை திட்டக் கமிஷன் ஒதுக்கீடு செய்துள்ளது.
இது, கடந்தாண்டு திட்ட ஒதுக்கீட்டைவிட, 250 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாகும். எனவே, நிதியை முழுமையாக பயன்படுத்தி, சிறந்த திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி, அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். மேலும், பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் தருவது தொடர்பாக அமைச்சரவையில் நேற்று முன்தினம் விவாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் நள்ளிரவுவரை 5 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை முதல்வராக இருந்த ரங்கசாமி, 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இவை அனைத்தும் வரியில்லா பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. என்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை துவக்கி, தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி, 9வது முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.
எனவே, பட்ஜெட்டில் வரி விதிப்பு இருக்குமா, வரியில்லாத பட்ஜெட்டா என்பது தொடர்பாக அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்., தேர்தல் அறிக்கையில், இலவச வாஷிங் மெஷின் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தன. தேர்தல் வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் அளிக்கும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என தெரிகிறது.அ.தி.மு.க., அதிரடி முடிவு: சட்டசபையில் கவர்னர் உரையின்போது, கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அதிரடி போராட்டம் நடத்தினர். அதேபாணியில், பட்ஜெட் தாக்கலின்போதும், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், நூதன போராட்டம் நடத்த அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இதற்காக ரகசிய ஆலோசனையில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட்டனர். சேலத்தில் சிறப்பு வழிபாடு அமைச்சரவை கூட்டம் முடிந்த கையோடு நேற்றுமுன்தினம் நள்ளிரவில் முதல்வர் ரங்கசாமி சேலம் புறப்பட்டார்.
சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவாமிகள் சிலை முன் பட்ஜெட் புத்தகத்தை வைத்து முதல்வர் ரங்கசாமி வழிபாடு நடத்தினார். என்.ஆர். காங்., பொதுச் செயலாளர் பாலன் உடனிருந்தார்.