விரைவில் தீர்வு கிடைக்கும்: ஆன்மிக தலைவர் நம்பிக்கை
விரைவில் தீர்வு கிடைக்கும்: ஆன்மிக தலைவர் நம்பிக்கை
விரைவில் தீர்வு கிடைக்கும்: ஆன்மிக தலைவர் நம்பிக்கை
ADDED : ஆக 23, 2011 04:36 AM
புதுடில்லி:'அன்னா ஹசாரேவுக்கும், அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள், விரைவில் தீர்க்கப்படும். இதற்காக, அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது' என, ஹசாரேயுடன் பேச்சு நடத்திய ஆன்மிக தலைவர் பையூஜி மகாராஜ் கூறினார்.அன்னா ஹசாரேவுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து, பையூஜி மகாராஜ் கூறியதாவது:கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு, அரசு தரப்பில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எந்த ஒரு தரப்புக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ செயல்பட நான் விரும்பவில்லை. அரசு தரப்பில் தயாரிக்கப்பட்ட மசோதாவையும், ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள மசோதாவையும், படித்துப் பார்த்தேன்.இரண்டு தரப்புக்கும் இடையே, தகவல் தொடர்பு இடைவெளி உள்ளதை அறிந்து கொண்டேன். இவை, விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். இரண்டு தரப்புக்கும் இடையே, என்னென்ன நிபந்தனைகள் வைக்கப்படுகின்றன, அதில் எந்த நிபந்தனைகள் ஏற்கப்படுகின்றன என்பது தான், தற்போதைய பிரச்னை. இதை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்.
இவ்வாறு பையூஜி மகாராஜ் கூறினார்.யார் இந்த பையூஜி மகாராஜ்:அன்னா ஹசாரேயின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, திரைமறைவு நடவடிக்கைகளை, அரசு துவங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநில மூத்த அதிகாரியான உமேஸ் சந்திர சாரங்கியை தவிர, இந்தூரைச் சேர்ந்த ஆன்மிக தலைவர் பையூஜி மகாராஜ் என்பவரும், ஹசாரேயுடன் பேச்சு நடத்தி வருகிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெரும்பாலான அரசியல்வாதிகள், பையூஜி மகாராஜுக்கு நன்கு தெரியும். ஹசாரேவுடனும், அவருக்கு ஏற்கனவே அறிமுகம் உள்ளது. இதனால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதிநிதியாக, பையூஜி மகாராஜை, அரசு பயன்படுத்தியுள்ளது.