Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/காற்றாலை மூலம் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் : முதல்வர் அறிவிப்பு

காற்றாலை மூலம் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் : முதல்வர் அறிவிப்பு

காற்றாலை மூலம் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் : முதல்வர் அறிவிப்பு

காற்றாலை மூலம் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் : முதல்வர் அறிவிப்பு

ADDED : ஆக 09, 2011 12:29 AM


Google News

சென்னை : உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு, காற்றாலை மூலம் மின்சாரம் வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.



சட்டசபையில் விதி எண் 110 கீழ், முதல்வர் ஜெயலலிதா அளித்த அறிக்கை: கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் மின் நிலைமை, நாளுக்கு நாள் மோசமடைந்து, அனைத்து தரப்பு மின் நுகர்வோர்களுக்கும் பல மணி நேர மின்தடை அமலில் இருந்தது.

வீட்டு பயனீட்டாளர்களுக்கு, சென்னை மாநகரத்தில் ஒரு மணி நேர மின்தடையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் மூன்று மணிநேர மின் தடையும், நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது இருந்தது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன், மின் நிர்வாகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக, சென்னை நீங்கலாக, மாநிலத்தின் பிற இடங்களில் இருந்த மூன்று மணி நேர மின்தடை, கடந்த மாதம் 1ம் தேதி முதல் இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதும், உயர் அழுத்தத் தொழிற்சாலைகள் மற்றும் வணிகப் பயனீட்டாளர்களுக்கு, இந்த மின் கட்டுப்பாடு முறைகள் நடைமுறையில் உள்ளன.



காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் மொத்த உற்பத்தித் திறன் 6.007 மெகாவாட். ஆனால், காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் எப்போதும் ஒரே அளவில் கிடைப்பதில்லை. இவ்வாறு, காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு, மின்சாரத் தேவை குறைவாக உள்ள இரவு நேரங்களில் தான் அதிகமாக கிடைக்கும். எனவே, பல நேரங்களில் இவ்வாறு கிடைக்கக் கூடிய மின்சாரத்தைப் பயன்படுத்த இயலாமல் போய் விடுவது உண்டு. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைக்க இயலாது. எனவே, மினசாரத் தேவை குறைவாக உள்ள நேரங்களில் கிடைக்கப்பெறும் அதிக அளவு மின்சாரத்தை, தேவை உள்ளவர்களுக்கு வழங்குவது தான் சிறந்த மின் நிர்வாகம். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காற்றாலை மூலம் இரவு நேரங்களில் பெறப்படும் அதிக அளவு மின்சாரத்தை, தற்போது பயன்படுத்த, என் தலைமையிலான அரசு, ஒரு செயல்திட்டத்தை வகுத்துள்ளது. இதன்படி, காற்றாலை மூலம் இரவு நேரங்களில் பெறப்படும் 100 மெகாவாட் மின்சாரம், உயர் அழுத்தத் தொழிற்சாலைகளுக்கு இரவு 10 முதல் காலை 5 மணி வரை, 20 சதவீத மின் தடையை விலக்கிக் கொண்டு வழங்கப்படும். காற்றாலை மூலம் இவ்வாறு பெறப்படும் மின்சாரம் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ள இசைவு தெரிவிப்போருக்கு இது வழங்கப்படும். இந்த செயல் திட்டம், இன்று (நேற்று) முதல் நடைமுறைப்படுத்தப்படும். காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வோர், அந்த மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு விற்பதன் மூலம் பயன் பெறுவர். மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம், மின் தேவை மற்றும் மின் பயனீட்டு அளவுக் கட்டணமாக, 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us