பெரியகுளத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை : மார்க்சிஸ்ட் உறுப்பினர் வலியுறுத்தல்
பெரியகுளத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை : மார்க்சிஸ்ட் உறுப்பினர் வலியுறுத்தல்
பெரியகுளத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை : மார்க்சிஸ்ட் உறுப்பினர் வலியுறுத்தல்
ADDED : ஆக 09, 2011 12:24 AM
சென்னை : ''தேனி மாவட்டத்தில், அதிகளவில் மாம்பழங்கள் விளைவதால், பெரியகுளத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று, சட்டசபையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் லாசர் வலியுறுத்தினார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில், லாசர் பேசியதாவது: கரும்பு மற்றும் நெல்லுக்கு புதிய விலை நிர்ணயிக்க வேண்டும்.
நில மோசடி தொடர்பாக, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டதக்கது. 40 ஆண்டுகளுக்கு முன், லட்சக்கணக்கான ஏக்கர் அளவிற்கு அரசு தரிசு நிலங்கள் இருந்தன. இதையெல்லாம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஏராளமான தரிசு நிலங்களை மீட்கலாம். நில சீர்திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில், ஒரு கும்பலிடம் ஏராளமான நிலங்கள் உள்ளன. நில உச்சவரம்புச் சட்டத்தை பயன்படுத்தி, அந்த கும்பலிடம் உள்ள நிலங்களை மீட்டு, நிலம் இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும். கூட்டுறவுத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும். தேனி மாவட்டத்தில், பரவலாக அதிகளவில் மாம்பழங்கள் விளைகின்றன. தமிழக மக்கள் உபயோகத்திற்குப் போக, 75 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரியகுளத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைத்தால், விவசாயிகளுக்கும், அரசுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். ஒரு தொழிற்சாலை அமைக்க, 25 கோடி ரூபாய் செலவாகும். 75 சதவீத மாம்பழத்தை அரைத்தால், 20 ஆயிரம் டன் மாம்பழக் கூழ் கிடைக்கும். இதன் மார்க்கெட் மதிப்பு, 200 கோடி ரூபாய். மேலும், 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்க முடியும். மத்திய அரசின், 100 நாள் வேலைத் திட்டம், முந்தைய ஆட்சியில் சரிவர செயல்படுத்தப்படவில்லை. கேரளா, கர்நாடகாவில், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதைப்போல், இங்கேயும் நடைமுறைப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு லாசர் பேசினார்.


