/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ரயில் இன்ஜின் மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு :திருப்பூரில் பரபரப்புரயில் இன்ஜின் மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு :திருப்பூரில் பரபரப்பு
ரயில் இன்ஜின் மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு :திருப்பூரில் பரபரப்பு
ரயில் இன்ஜின் மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு :திருப்பூரில் பரபரப்பு
ரயில் இன்ஜின் மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு :திருப்பூரில் பரபரப்பு
ADDED : ஜூலை 21, 2011 12:54 AM
திருப்பூர் : திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ரயில் இன்ஜின் மீது, ஒருவன் கல்லெறிந்தான்.
டிரைவர் லாவகமாக விலகியதால், கண்ணாடி மட்டும் உடைந்தது. 'எமர்ஜென்சி பிரேக்' போட்டு, நடுவழியில் இன்ஜினை நிறுத்தி, கல்லெறிந்தவனை விரட்டி பிடித்து, இருப்பு பாதை பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஈரோட்டில் இருந்து சரக்குகளை எடுத்து வர, நேற்று பகல் 11.20 மணிக்கு கோவை பீளமேட்டில் இருந்து ஈரோடு நோக்கி இரண்டு டீசல் இன்ஜின்கள் சென்றன. கோவையை சேர்ந்த ஜெகநாதன் (37) முதல் இன்ஜினை (எண் 1461) ஓட்டினர். மற்றொரு இன்ஜினை (எண் 1384), ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த சீனிவாசன் (35) இயக்கினார். திருப்பூரை அடுத்து இரண்டாவது ரயில்வே கேட் 440/2 என்ற மைல் கல் அருகே இன்ஜின் வந்தபோது, எதிர் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த ஒருவர், பெரிய கல்லை எடுத்து இன்ஜின் டிரைவரை குறி பார்த்து எறிந்தார். இன்ஜின் வலதுபுற கண்ணாடி உடைந்து சுக்குநூறாகியது. டிரைவர் ஜெகநாதன், இன்ஜினை எமர்ஜென்சி பிரேக் போட்டு நிறுத்தினார். ஜெகநாதனும், மற்றொரு இன்ஜின் டிரைவர் சீனிவாசனும் இறங்கிச் சென்று, கல் எறிந்த நபரை விரட்டிப் பிடித்தனர். நடுவழியில் இன்ஜின் நிறுத்தப்பட்டதால், திருப்பூர் இருப்புப்பாதை பாதுகாப்பு படைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 'இன்ஜின் கண்ணாடியை ஒருவர் உடைத்து விட்டதால், நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது; திருப்பூர் - ஈரோடு ரோட்டில் வேறெந்த ரயில்களை அனுமதிக்க வேண்டாம்,' என, தகவல் கொடுத்தனர். அடுத்த சில நிமிடங்களில் இருப்பு பாதை பாதுகாப்பு படை எஸ்.ஐ., சிவசாமி, ஏட்டு மணிகண்டன் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை ஏட்டு ஹபீது ஆகியோர் வந்தனர். அவர்களிடம் அந்நபரை ஒப்படைத்து விட்டு, இன்ஜின் டிரைவர்கள் இருவரும் ரயிலில் ஈரோடு புறப்பட்டனர்.
இருப்பு பாதை பாதுகாப்பு படை போலீசார் கூறுகையில், 'திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டை அடுத்த கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தராஜன் மகன் மணிகண்டன் (32); ஏழாம் வகுப்பு படித்த இவர், வேலை தேடி அலைந்து, வேலை கிடைக்காமல் மனநலம் பாதிக்கப்பட்டவராக மாறி விட்டார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், வழக்குப்பதிவு செய்யாமல், பெற்றோரை அழைத்து எச்சரித்து அனுப்பி விடுவோம்,' என்றனர். எமர்ஜென்சி பிரேக் போட்டது ஏன்? : இன்ஜின் டிரைவர் ஜெகநாதன் கூறுகையில்,''இன்ஜினை 65 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கிக் கொண்டிருந்தோம். எதிர் தண்டவாளத்தில் அவன் அமர்ந்திருந்தான்; கல்லை எடுத்து எறிவான் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுவரை இப்படி நடந்ததில்லை. சற்று விலகியதால் கல் முகத்தில் படாமல் தப்பித்தேன். இன்ஜின் மட்டும் என்பதால், 'எமர்ஜென்சி பிரேக்' போட்டேன்,'' என்றார். போக்குவரத்து பாதிக்கவில்லை: திருப்பூர் - சென்னை ரயில் பாதையில் 23 நிமிடங்கள் (12.30 முதல் 12.53 வரை) இன்ஜின் நிறுத்தப்பட்டது. 12.55க்கு ஆலப்புழாவில் இருந்து தான்பாத் செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. 12.54க்கு சம்பவ இடத்தில் இருந்து, கண்ணாடி உடைந்த இன்ஜின் புறப்பட்டு சென்று விட்டதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.


