அடுத்த வாரம் புதிய கவர்னர்கள் நியமனம்
அடுத்த வாரம் புதிய கவர்னர்கள் நியமனம்
அடுத்த வாரம் புதிய கவர்னர்கள் நியமனம்
ADDED : ஜூலை 11, 2011 10:03 PM
புதுடில்லி: தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களுக்கு, விரைவில் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குடன் விவாதித்த சோனியா, கவர்னர்கள் நியமனம் குறித்தும் ஆலோசித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை நடைபெறுகிறது. அதன்பின், அடுத்த வாரத்தில், புதிய கவர்னர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, மத்தியப் பிரதேச கவர்னர் ராமேஷ்வர் தாக்கூர், கோவா கவர்னர் எஸ்.எஸ்.சித்து போன்றோரின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதால், அவர்களுக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவர். பஞ்சாப் கவர்னராக இருக்கும் சிவராஜ் பாட்டீல், ராஜஸ்தான் மாநில கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். அதனால், ராஜஸ்தானுக்கு புதிய கவர்னரும், டில்லி துணைநிலை ஆளுனராக பதவி வகிக்கும் தேஜேந்திர கன்னாவின் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ளதால், அவர் வேறு மாநில கவர்னராக மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரகண்ட் மாநில கவர்னராக இருக்கும் மார்க்ரெட் ஆல்வா, தமிழக கவர்னராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுவதால், அந்த மாநிலத்திற்கும் புதிய கவர்னர் நியமிக்கப்படலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.