அத்வானி ரத யாத்திரை: பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை
அத்வானி ரத யாத்திரை: பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை
அத்வானி ரத யாத்திரை: பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை

புதுடில்லி:ஊழலுக்கு எதிராக, அத்வானி நடத்தவுள்ள ரத யாத்திரை குறித்து, பா.ஜ., உயர்மட்டக் குழு நேற்று விரிவாக ஆலோசித்தது.
சமீபத்தில், பார்லிமென்டில் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, 'ஊழலுக்கு எதிராக, விரைவில் நாடு தழுவிய ரத யாத்திரை ஒன்றை நடத்த உள்ளேன்' என, அறிவித்தார். அத்வானியின் இந்த அறிவிப்பு, அனைவரையும் வியப்படைய வைத்ததோடு, பா.ஜ., கட்சி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியைப் போக்க நடத்தப்படும் யாத்திரை என்றும் நம்பப்படுகிறது.
இந்நிலையில், அத்வானியின் வீட்டில் பா.ஜ., உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் நிதின் கட்காரி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி, பால் ஆப்தே, அனந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:இன்றைய (நேற்றைய) கூட்டத்தில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து, பா.ஜ., தலைவர்கள் ஆலோசித்தனர். அத்துடன், அத்வானி மேற்கொள்ள உள்ள ரத யாத்திரை குறித்தும், தலைவர்கள் பலர் யோசனை தெரிவித்தனர். ஜெயபிரகாஷ் நாராயணன் பிறந்த நாளான, அக்டோபர் 17 முதல், ரத யாத்திரையை நடத்த முன்னர் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதை மாற்றி, மகாத்மா காந்தி பிறந்த நாளான, அக்டோபர் 2ம் தேதி முதல் அத்வானி தன் யாத்திரையை துவக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. மொத்தம், மூன்று மணி நேரத்திற்கு மேலாக, உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது. அத்வானி தன் ரத யாத்திரையை, தொடர்ச்சியாக நடத்த வேண்டாம் என்றும், தசரா பண்டிகையின் போது, யாத்திரையை நிறுத்திக் கொள்ள வேண்டும். 6 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு, யாத்திரை மேற்கொள்ள வேண்டும். யாத்திரையில், 'ஊழல் ஒழிப்பே' முக்கியத்துவம் பெற வேண்டும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர்.
பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் உத்திரப் பிரதேச மாநிலங்களில், விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநிலங்களிலும், அத்வானியின் யாத்திரை நடைபெற வேண்டும் என, சில தலைவர்கள் யோசனை கூறினர். அதற்கு, வேறு சில தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இவ்வாறு, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.