சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த ஊழல்கள் : சிக்கும் முக்கிய புள்ளிகள்
சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த ஊழல்கள் : சிக்கும் முக்கிய புள்ளிகள்
சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த ஊழல்கள் : சிக்கும் முக்கிய புள்ளிகள்
UPDATED : செப் 12, 2011 12:01 AM
ADDED : செப் 11, 2011 11:25 PM

சென்னை: 'திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஊழல் செய்தவர்கள் மீது விரைவில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்படும்' என்று, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால், சங்கத்தின் முந்தைய நிர்வாகிகள் சிலர் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இது, தமிழ் திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த ராம.நாராயணனும், செயலராக இருந்த சிவசக்தி பாண்டியனும் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். இதனால், துணைத் தலைவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரன், தற்காலிக தலைவராக்கப்பட்டார். சங்கத்திற்கு முறைப்படி தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் சங்கம் திறம்பட செயல்பட முடியும் என்று தயாரிப்பாளர்கள் பலர் வலியுறுத்தியதால், பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், சங்கத் தேர்தல் தேதியை முடிவு செய்ய, சென்னையில், பிலிம் சேம்பர் தியேட்டரில், தயாரிப்பாளர்கள் சங்க சிறப்பு கூட்டம், தற்காலிக தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடந்தது.
கூட்டம் துவங்கியதுமே, 'சங்கத்தில் முந்தைய நிர்வாகிகளாக இருந்தவர்கள் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளனர். கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர். பல தயாரிப்பாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இதனால், பல தயாரிப்பாளர்கள் தொழிலை விட்டே ஒதுங்கும் நிலை ஏற்பட்டது' என்று, பல தயாரிப்பாளர்கள் ஆத்திரத்தில் பொங்கினர். இதற்கு பதில் சொல்வதைப்போல சில தயாரிப்பாளர்கள் பேச, ஆத்திரப்பட்ட தயாரிப்பாளர்கள் எதிர்த்து பேச, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த ரகளைக்கு நடுவிலும் கூட்டம் தொடர்ந்தது.
புதிய படத்தின் கிளிப்பிங்ஸ், பாடல்கள், கேபிள் 'டிவி'க்களில் ஒளிபரப்புவதற்கு, ஒரு படத்திற்கு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று, 'டிவி' சேனல்களுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம், 2007ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டது. அதன் மூலம், 2011ம் ஆண்டு வரை வெளியான 594 படங்களுக்கு, 7 கோடியே 72 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், தயாரிப்பாளர் சங்கத்திற்கு கிடைத்திருக்க வேண்டும்.
இப்பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் வட்டி மட்டுமே ஒரு கோடி ரூபாய் கிடைத்திருக்கும். இத்தொகையில் தயாரிப்பாளர்கள் சங்க கமிஷன் போக, மீதப் பணம் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தொகையை இன்னும் வழங்கவில்லை. இப்பணத்திற்கு என்ன கணக்கு உள்ளது, முந்தைய நிர்வாகிகள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. உடனடியாக உரிய தயாரிப்பாளர்களுக்கு சங்கம் மூலம் உரிய பணம் வழங்கப்பட வேண்டும்.
சங்க அலுவலகத்தை உட்பக்கம் அழகுபடுத்த 60 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு செலவு ஆகியிருக்குமா என சந்தேகம் ஏற்படுகிறது. சங்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கையில் தவறு நடந்துள்ளது. தயாரிப்பாளர்களுக்கு அரசு மூலம் வீட்டு வசதி பெற்றுத் தருவதற்கு ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் 2,000 ரூபாய் வாங்கி, நான்கு ஆண்டுகளாக முந்தைய நிர்வாகிகள் கையில் வைத்திருந்துவிட்டு, ராஜினாமா செய்த பிறகு, வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.
சங்கத்திற்கு ஆண்டு மலர் வெளியிடாமலேயே செலவு கணக்கு மட்டும் காட்டி, பல லட்ச ரூபாயை சுருட்டியுள்ளனர். படவெளியீட்டு பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்து, பல தயாரிப்பாளர்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர் என்றெல்லாம் பல தயாரிப்பாளர்கள் புகார்களை அடுக்கியதால் மீண்டும், மீண்டும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத் தலைவர் சந்திரசேகர், நீண்டநேரம் போராடி தயாரிப்பாளர்களை அமைதிப்படுத்தினார்.
அதன் பிறகு கூட்டத்தில், 'வரும் அக்டோபர் 9ம் தேதி சங்கத் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் பொறுப்பாளராக இப்ராகிம் ராவுத்தரும், அவருக்கு துணையாக இரண்டு வழக்கறிஞர்களும் நியமிக்கப்படுவர். சங்கத்தில் முன்பு நிர்வாகிகளாக இருந்தவர்கள் செய்த முறைகேடுகள் குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு, விரைவில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்படும். இப்புகார் பட்டியலிலிருப்பவர்கள், சங்கத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாது. மீறி போட்டியிட்டால் அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது' என்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் அன்பாலயா பிரபாகரன், பொருளாளர் காஜாமைதீன், தயாரிப்பாளர்கள் கேயார், ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம், தேனப்பன், நாஞ்சில் அன்பழகன், சாலை சகாதேவன், ராதாகிருஷ்ணன் உட்பட 400க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.