Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/முல்லைப் பெரியாற்றில் அணை கட்ட புதிய நிறுவனம் துவக்க கேரளா முடிவு

முல்லைப் பெரியாற்றில் அணை கட்ட புதிய நிறுவனம் துவக்க கேரளா முடிவு

முல்லைப் பெரியாற்றில் அணை கட்ட புதிய நிறுவனம் துவக்க கேரளா முடிவு

முல்லைப் பெரியாற்றில் அணை கட்ட புதிய நிறுவனம் துவக்க கேரளா முடிவு

ADDED : செப் 07, 2011 11:59 PM


Google News
Latest Tamil News

திருவனந்தபுரம்: முல்லை பெரியாற்றில், பழைய அணையை அகற்றாமல், புதிய அணை கட்டவும், அதற்காக, 'பெரியார் மேம்பாட்டுக் கழகம் கேரளா' என்ற பெயரில் புதிய நிறுவனம் அமைக்கவும், கேரள அரசு முடிவெடுத்துள்ளது.



தமிழக - கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில், தேக்கடி அருகே அடர்த்தியான வனப்பகுதியில், பெரியாறு நதியின் மீது, முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது.

இவ்வணை மிகவும் பழமை வாய்ந்ததாகி விட்டதாகவும், பழுதடைந்து வருவதால் அணை உடையும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறு உடைந்தால், கேரளாவில் ஏழு மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், அதனால், புதிய அணை அமைக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.புதிய அணை கட்ட, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அடுத்து, சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக்குழுவை நியமித்து, இரு மாநில அரசிடம் இருந்து, பல்வேறு தகவல்களை திரட்டி வருகிறது.



இந்நிலையில், புதிய அணை கட்டும் போது, தற்போதுள்ள பழைய அணையை இடித்து அப்புறப்படுத்தலாமா என்றும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் இடிபாடுகளை எங்கே கொட்டுவது என்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து, அதிகாரிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.



இதுகுறித்து, ஆராய்வதற்காக, நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் தலைமையில், உயரதிகாரிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமை செயலர் கே.ஜெயக்குமார், நீர்வளத்துறை செயலர் வி.ஜெ.குரியன், முல்லை பெரியாறு தனிப்பிரிவு தலைவர் எம்.கே.பரமேஸ்வரன் நாயர் ஆகியோர் பங்கேற்றனர்.



கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஜோசப், ''முல்லை பெரியாறில் தற்போதுள்ள அணையை அகற்றாமல், புதிய அணை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிக நீர் வெளியேறுவதற்கு வசதியாக, 32 அடி ஆழம் மற்றும் 42 அகலத்தில் ஸ்பில்வே கால்வாய் விரிவுப்படுத்தப்படும். அது முடியாத பட்சத்தில், தற்போதுள்ள அணைக்கு அருகே உள்ள பேபி அணையின் ஒரு பகுதியை அகற்றி விட்டு, அப்பகுதியில் புதிய கால்வாய் அமைத்து, நீரை புதிய அணைக்குக் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய அணை கட்டுவதற்கு வசதியாக, 'பெரியாறு மேம்பாட்டுக் கழகம், கேரளா' என்ற பெயரில் புதிய நிறுவனம் துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வரும் 17ம் தேதி மேலும், விவாதிக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு, வரும் 30ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள உயர்மட்ட குழுவிடம் அளிக்கப்படும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us