ADDED : செப் 01, 2011 02:03 AM
பந்தலூர் : தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2 தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.பந்தலூர் ரெப்கோ வங்கி கிளை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேரவை உறுப்பினர் ஆனந்தராஜா வரவேற்றார்.
வங்கி கிளை மேலாளர் உமாபதி முன்னிலை வகித்து, மாணவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவி தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், ''தாயகம் திரும்பியோரில் பெரும் பாலானோர் தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வரும் நிலையில் அவர்களின் குழந்தைகள் சிறப்பான கல்வியறிவை பெற வேண்டும் எனும் நோக்கில் ரெப்கோ வங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மேல்படிப்பிற்கு பயன்படுத்தி கொள்ளும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் தலா 2 ஆயிரம் ரூபாய் உதவி தொகை மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் பின் தங்கிவிடாமல் மேலும் படித்து வாழ்வில் சிறப்பு பெற வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில் 6 மாணவ, மாணவியருக்கு உதவி தொகை வழங்கப்பட்டது. பேரவை உறுப்பினர்கள் மோகன்தாஸ், சக்திவேல், சேரன் அறக்கட்டளை நிர்வாகி லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உறுப்பினர் கிருஷ்ணபாரதியார் நன்றி கூறினார்.