Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"கலைஞர் டிவி'க்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவது யூகமானது : சரத்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்

"கலைஞர் டிவி'க்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவது யூகமானது : சரத்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்

"கலைஞர் டிவி'க்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவது யூகமானது : சரத்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்

"கலைஞர் டிவி'க்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவது யூகமானது : சரத்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்

ADDED : ஆக 20, 2011 11:12 PM


Google News

புதுடில்லி : ''கலைஞர் 'டிவி'க்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ., தெரிவித்துள்ள குற்றச்சாட்டு, யூகத்தின் அடிப்படையிலானது.

அற்பத்தனமான குற்றச்சாட்டு,'' என, அந்த 'டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் சார்பில், சி.பி.ஐ., கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.



ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும், டில்லி சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட்டில், குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வது தொடர்பான வாதம் நடக்கிறது. நேற்று நடைபெற்ற வாதத்தின் போது, சரத்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அல்டாப் அகமது கூறியதாவது: சினியுக் நிறுவனம், 'கலைஞர் டிவி'க்கு 200 கோடி ரூபாய் கொடுத்தது, நிறுவனங்களுக்கு இடையேயான டிபாசிட் தொடர்பானது. இதற்கும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது 'கலைஞர் டிவி'க்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் என, சி.பி.ஐ., தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு, யூகத்தின் அடிப்படையிலானது; அற்பத்தனமானது. சி.பி.ஐ., இந்த வகையில், தன் பணியை சிறப்பாக செய்யவில்லை.



'கலைஞர் டிவி'யின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் (பெய்டு-அப்-கேபிடல்) முன்னர் 5 கோடி ரூபாயாக இருந்த போதுதான், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று, அதற்கு 100 கோடி ரூபாய் கொடுத்தது. அப்படிப்பட்ட நிலையில், 'கலைஞர் டிவி'க்கு தனி நபர் ஒருவர் 200 கோடி ரூபாய் கொடுத்ததை எப்படி தவறு என சொல்ல முடியும். அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் குறைவாக இருந்ததற்கும், பணம் கொடுத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் எல்லாம் சட்டப்படியே நடந்துள்ளன. அதற்கான ஆதாரங்கள் எல்லாம் உள்ளன. மேலும், இந்த லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்படும் காலத்திற்கும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற காலத்திற்கும் இடையே நிறைய இடைவெளி உள்ளது. 'கலைஞர் டிவி' மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தையும், முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையையும் தொடர்புபடுத்த சி.பி.ஐ., முற்பட்டுள்ளது. ஆனால், இவை ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை.



பங்கு சந்தாதாரர் ஒப்பந்தம் மூலமே, சினியுக் நிறுவனத்திடம் இருந்து 'கலைஞர் டிவி' பணம் பெற்றது. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. உரிய உத்தரவாதங்கள் இல்லை என, சி.பி.ஐ., சொல்வது எல்லாம் தவறானது. 10 சதவீத வட்டிக்கு கடனாகத்தான் 'கலைஞர் டிவி' 200 கோடி ரூபாயை பெற்றுள்ளது. 'கலைஞர் டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஒரு போதும் தன்னிச்சையாக செயல்படவில்லை. இயக்குனர் குழுமத்தின் ஒப்புதலின் அடிப்படையிலேயே அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. சரத்குமாரால் காசோலைகளில் கையெழுத்திட முடியாது. வேறு ஒருவர்தான் கையெழுத்திடுகிறார். அப்படிப்பட்ட நிலையில், இவரை சிறையில் அடைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு அல்டாப் அகமது கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us