UPDATED : ஜூலை 24, 2011 07:24 PM
ADDED : ஜூலை 24, 2011 12:07 PM
திருநெல்வேலி:நெல்லையில் தி.மு.க.,பிரமுகர் ஆக்கிரமித்துள்ள பள்ளிவாசல் சொத்துக்களை மீட்க வலியுறுத்தி போராட்டம் நடத்த வந்த 350 பேர் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி டவுனை அடுத்துள்ள பேட்டையில் நவாப் வாலாஜா பள்ளிவாசலுக்கு சொந்தமாக கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
இதனை மீரான்பார்தி என்பவர் நிர்வகித்து வந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலாளரான கருப்பசாமிபாண்டியனின் உறவினர் ஸ்டாலின்பாண்டியன் என்பவர் அதனை போலியான ஆவணங்கள் தயார்செய்து நிர்வகித்துவருகிறார் என கூறும் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அந்த சொத்துக்களை மீட்டு வக்ப்வாரியத்தில் சேர்க்க வலியுறுத்தி கடந்த ஒரு ஆண்டாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று காலையில் பள்ளிவாசல் முன்பாக கரசேவை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். பேட்டைக்கு வந்த கட்சியினரை அதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். கட்சி தலைவர் ரபீக் தலைமையில் 350 பேரை கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.