Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கடத்தல்காரர்களுக்கு தகவல் சொல்றாங்க: கிராம சபா கூட்டத்தில், அமைச்சர் குற்றச்சாட்டு

கடத்தல்காரர்களுக்கு தகவல் சொல்றாங்க: கிராம சபா கூட்டத்தில், அமைச்சர் குற்றச்சாட்டு

கடத்தல்காரர்களுக்கு தகவல் சொல்றாங்க: கிராம சபா கூட்டத்தில், அமைச்சர் குற்றச்சாட்டு

கடத்தல்காரர்களுக்கு தகவல் சொல்றாங்க: கிராம சபா கூட்டத்தில், அமைச்சர் குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 24, 2011 02:34 AM


Google News

உடுமலை : 'மணல் கடத்தலை தடுக்க வேண்டிய வருவாய் துறை அதிகாரிகள், கடத்தல்காரர்களுக்கு தகவல் சொல்பவர்களாக மாறியுள்ளதால், கடத்தல் தொடர்கதையாக உள்ளது' என, ஊரக தொழில்துறை அமைச்சர் தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை அருகே ராவணாபுரத்தில், நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது.

மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட ஊரக தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு பேசியதாவது:ராவணாபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள், பஸ் வசதி, இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் மின்வாரியம் சார்பில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் உட்பட வசதிகள் கேட்டு அளித்துள்ள விண்ணப்பங்கள் மீது, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால், பல கிராமங்களில் பயனாளிகளுக்கு பட்டா கிடைப்பது இழுபறியாகியுள்ளது. மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.



ராவணாபுரம் உட்பட 50க்கும் அதிகமான கிராமங்களில், நிலத்தடி நீருக்கு ஆதாரமாக உள்ள பாலாறு மற்றும் நல்லாற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடப்பதால், கூட்டுக்குடிநீர் திட்ட உறிஞ்சு கிணறுகள் கூட பாதிக்கப்பட்டுள்ளதாக, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வருவாய்துறை அதிகாரிகள் தரப்பில் பலமுறை நானே வலியுறுத்தியும் பயனில்லை. அதிகாரிகள் ரெய்டு வரும் முன்பே, மணல் கடத்துபவர்களுக்கு வருவாய் துறையை சேர்ந்த சிலர் மொபைல் போனில் தகவல் தெரிவித்து, அவர்களை தப்பிக்க செய்கின்றனர்.உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10க்கும் அதிகமான மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த மக்கள், தங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஓட்டுரிமை கேட்டு வருகின்றனர்; அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.



காட்டுப்பட்டி, புளியம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு, தெருவிளக்கு மற்றும் வீடுகள் பராமரிப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பில், மலைவாழ் மக்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட தைலம் காய்ச்சும் தொழிற்சாலை திறக்கப்படாமல் உள்ளது. சோலார் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன; மலைவாழ் குடியிருப்பிலுள்ள பள்ளிகளுக்கு, ஆண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அமைச்சர் சண்முகவேலு பேசினார்.மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் முன்னிலையில், மணல் கடத்தல் குறித்து அமைச்சர் நேரடியாக குற்றம் சாட்டியதால், பரபரப்பு ஏற்பட்டது. வருவாய், வனம், குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம், ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள்

பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us