ADDED : ஜூலை 19, 2011 12:24 AM
ஓசூர் : ஓசூர் அருகே சாக்கடை குழியில் விழுந்த பசும்மாட்டை கயிறு கட்டி காப்பாற்ற பொதுமக்கள் முயன்றனர். கடைசி வரை மீட்க முடியாமல் அந்த மாடு பரிதாபமாக இறந்தது. ஓசூர் சிப்காட் கோவிந்தரஅக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேஷப்பா. இவர் பத்து பசும்மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த மாடுகளை வழக்கமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு அழைத்து செல்வார். நேற்று வழக்கும் போல் மேய்ச்சலுக்காக மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளார். அப்போது, ஒரு மாடு வழித்தவறி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் பின்புறம் செப்டிக்டேங் அருகே உள்ள பாதாள சாக்கடை குழியில் விழுந்தது.
மாட்டின் தலை, உடம்பு முழுவதும் குழிக்குள் சென்றது. கால்கள் மட்டும் மேல்பகுதியில் தெரிந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே கயிறு கட்டி குழியில் விழுந்த மாட்டை மீட்க பொதுமக்கள் முயன்றனர். கடைசி வரை மாட்டை மீட்க முடியாததால், குழியில் விழுந்த மாடு மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது. இப்பகுதியில் இதே÷ பால் ஏராளமான சாக்கடை குழிகள் காணப்படுகிறது. இதனால், மாடுகள் அடிக்கடி இந்த குழியில் விழுந்து இறக்கம் சம்பவங்கள் நடக்கிறது. பள்ளி குழந்தைகள் இந்த வழியாக பள்ளிகளுக்கு சென்று வருவதால், உயிர் பலி ஏற்படும் முன் இதுபோன்ற அபாய குழிகளை மூடுவதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.