மும்பை குண்டு வெடிப்பை ஆப்கனோடு ஒப்பிடுவதா? : ராகுல் மீது சிவசேனா பாய்ச்சல்
மும்பை குண்டு வெடிப்பை ஆப்கனோடு ஒப்பிடுவதா? : ராகுல் மீது சிவசேனா பாய்ச்சல்
மும்பை குண்டு வெடிப்பை ஆப்கனோடு ஒப்பிடுவதா? : ராகுல் மீது சிவசேனா பாய்ச்சல்

மும்பை : 'மும்பை குண்டு வெடிப்பை, ஆப்கனில் நடக்கும் பயங்கரவாதச் சம்பவங்களோடு ஒப்பிட்டு, ராகுல் கூறியது, மிகவும் தவறானது.
சிவசேனா எம்.பி., சஞ்சய் ரவுத் கூறியதாவது: மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் ஒப்பிட்டு, காங்., பொதுச் செயலர் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். இது தவறான நடவடிக்கை. மக்களை பாதுகாப்பதற்காகவே உங்களை தேர்வு செய்துள்ளோம். ஆப்கனில் நடக்கும் தாக்குதல்களை, மும்பை தாக்குதலுடன் ஒப்பிடுவது, குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களை, அவமதிக்கும் செயல். இதற்காக, ராகுல் மீது, ராஜ துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். ராகுல், இந்தியாவில் வசிக்க தகுதியுடையவர் அல்ல. இவ்வாறு சஞ்சய் ரவுத் கூறினார்.
சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில்,'பயங்கரவாத சம்பவங்களிலிருந்து, மும்பை மக்கள் விரைவில் மீண்டு விட்டனர் என, காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் இந்த சம்பவத்தை மறந்து விடுகின்றனர். அப்பாவி மக்கள் ஏன் பலியாக வேண்டும். இதற்கு யார் பொறுப்பேற்பது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மும்பையில் தாக்குதல்கள் நடக்கின்றன. மத்தியில் அரசாங்கம் இருக்கிறதா என்றே தெரியவில்லை' என்றார்.
அமிதாப் கண்டனம்: பாலிவுட் நடிகர் அமிதாப் கூறுகையில்,'குண்டு வெடிப்புகளில் இருந்து, மும்பை மக்கள் விரைவாக மீண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும், குண்டு வெடிப்பு நடந்த இடங்களிலிருந்து, செய்தி ஒளிபரப்பிய 'டிவி'சேனல்களின் நடவடிக்கை சரியானது அல்ல. துயரமான ஒரு சம்பவம் நடக்கும்போது, அதுபற்றிய விளக்கமான தகவல்களை வெளியிடுவதுடன், இதை நாங்கள் தான் முதலில் வெளியிட்டோம் என, கூறும் 'டிவி' மீடியாக்களின் நடவடிக்கை மோசமானதாக உள்ளது'என்றார்.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,'இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்கள் மூலம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தடுக்க முடியாது'என்றார்.
உளவுத் துறை தோல்வி: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், 'மும்பை குண்டு வெடிப்பு சம்பவம், உளவுத் துறையின் தோல்வியால் ஏற்பட்டது அல்ல என, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகிறார். தாஜ் ஓட்டல் தாக்குதலுக்கு பின், மீண்டும் ஒரு தாக்குதல் மும்பையில் நடந்துள்ளது. ஆனால், இதுபற்றிய உளவுத் தகவல்கள், முன் கூட்டியே கிடைக்கவில்லை. எனவே, இது உளவுத் துறையின் தோல்வியால் ஏற்பட்டது தான்'என்றார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், 'உளவுத் துறையின் தோல்வியால் இந்த குண்டு வெடிப்புகள் நடக்கவில்லை என, கூறுகின்றனர். அப்படியானால், இந்த சம்பவம் எப்படி நடந்தது. புலனாய்வு அமைப்புகள் செயல்படுகின்றனவா. அப்படி செயல்பட்டால், இந்த குண்டு வெடிப்புகளை ஏன் தடுக்க முடியவில்லை' என்றார்.