Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/தனி தெலுங்கானாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கமிஷன்அறிக்கை வழி செய்யவில்லை: குலாம்நபி ஆசாத்

தனி தெலுங்கானாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கமிஷன்அறிக்கை வழி செய்யவில்லை: குலாம்நபி ஆசாத்

தனி தெலுங்கானாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கமிஷன்அறிக்கை வழி செய்யவில்லை: குலாம்நபி ஆசாத்

தனி தெலுங்கானாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கமிஷன்அறிக்கை வழி செய்யவில்லை: குலாம்நபி ஆசாத்

ADDED : ஜூலை 13, 2011 12:21 AM


Google News
பீஜிங்:ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அளித்த அறிக்கை, தனி தெலுங்கானா உருவாக்குவதற்கு வழி செய்யவில்லை, என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்க நாடுகளின் (பிரிக்) சுகாதார அமைச்சர்கள் மாநாடு, பீஜிங் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின், நிருபர்களிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:தெலுங்கானா மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அதே நேரத்தில் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம்.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்கான, சாத்திய கூறுகளை ஆராய்வதற்காக தான், ஸ்ரீகிருஷ்ணா கமிஷனை அமைத்தோம். தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு உறுதியான ஒரு வழியை கூறியிருந்தால் கூட, நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அந்த கமிஷன் ஆறு தீர்வுகளை கூறியது. ஆனால், அதில் ஒன்று கூட நடைமுறைக்கு சாத்தியபடவில்லை.மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களை சமீப காலத்தில் பிரித்து, புதிய மாநிலங்களை உருவாக்கியுள்ளோம். அங்கு, புதிய மாநிலங்களை உருவாக்க, அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டன. எதிர்ப்பே இல்லாத காரணத்தால், புதிய மாநிலம் உருவாக்குவதற்கான மசோதா, சட்ட சபையில் எளிதாக நிறைவேறியது. எனவே, புதிய மாநிலங்கள் பிரச்னையில்லாமல் உருவானது.

இந்த நிலை ஆந்திராவில் கிடையாது. ஆந்திராவில் மூன்று பகுதிகள் உள்ளன. தெலுங்கானா பகுதி மக்கள், தனி மாநிலம் கேட்கின்றனர். ஆனால், இதற்கு மற்ற பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.ஆந்திர சட்ட சபையில், தனி மாநிலத்துக்குரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேறினால் தான், தனிமாநிலம் உருவாவதற்கு வழி ஏற்படும். இல்லாவிட்டால், இந்த விஷயத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேற்றம் காண முடியாது.இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.ஆந்திர மாநிலத்துக்கான, காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us