வெளிநாட்டு சக்திகள் எவை? : பிரதமர் விளக்க வலியுறுத்தல்
வெளிநாட்டு சக்திகள் எவை? : பிரதமர் விளக்க வலியுறுத்தல்
வெளிநாட்டு சக்திகள் எவை? : பிரதமர் விளக்க வலியுறுத்தல்

புதுடில்லி : 'அன்னா ஹசாரேயின் பின்னணியில் இருக்கும் வெளிநாட்டு சக்திகள் எவை' என, பிரதமர் விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ராஜா கூறுகையில், ''சில வெளிநாட்டு சக்திகள் இந்தியாவை பலவீனப்படுத்துவதாக பிரதமர் கூறுகிறார். அந்த வெளிநாட்டு சக்திகள் எவை என்பதையும், எந்தவகையில், அவர்கள் இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சி செய்கின்றனர் என்பதையும் பிரதமர் மன்மோகன் சிங் விளக்க வேண்டும்' என்றார்.
பா.ஜ., தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், ''அமெரிக்காவும், காங்கிரஸ் கட்சியும், ஈருடல் ஓருயிராய் இருக்கின்றன. காங்கிரசின் கை தான் அமெரிக்காவின் கை. நம் நாட்டு நலனை ஒதுக்கிவிட்டு, அமெரிக்க நலனைத்தான் காங்கிரஸ் பாதுகாக்கிறது,'' என்றார்.
லோக்பால் மசோதா குறித்து கருத்து தெரிவிக்காத கட்சிகள் : ''லோக்பால் மசோதா குறித்து ஆறு பெரிய அரசியல் கட்சிகள் எந்த விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை,'' என, நேற்று லோக்சபாவில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ''லோக்பால் வரைவு மசோதா உருவாக்க நியமிக்கப்பட்ட கமிட்டியின் தலைவர், மசோதா தொடர்பாக 12 பெரிய அரசியல் கட்சிகளின் கருத்தைக் கேட்டிருந்தார். இவற்றில் ஆறு கட்சிகள் மட்டுமே கருத்து தெரிவித்தன; மற்ற ஆறு கட்சிகள் கருத்து தெரிவிக்கவில்லை,'' என்றார். இருந்தாலும், கருத்து தெரிவித்த மற்றும் தெரிவிக்காத கட்சிகளின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.


