
தி.மு.க., தலைவர் கருணாநிதி: காரைக்குடி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி, ஆள்கடத்தலில் ஈடுபட்டு, நில அபகரிப்பு செய்ததாக, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க., ஆதரவு நாளேடு, 'தினமலர்' செய்தி வெளியிட்டுள்ளது.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆதரவு நாளேடுன்னு சொல்றீங்க...
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்: நான் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொதுக் கூட்டத்துக்கு செல்லும்போது, அங்குள்ள சிறைச்சாலைக்கு முதலில் செல்கிறேன். இதைவிட பெருமை வேறென்ன இருக்க முடியும்?
டவுட் தனபாலு: ஏங்க அந்தம்மாவை, சும்மா உசுப்பேத்தி விடறீங்க... உங்களை மேலும் பெருமைப்படுத்தற விதமா, மிச்சமுள்ள மாவட்டங்களையும், 'உள்ளே' தள்ளிடப் போறாங்க...!
பத்திரிகைச் செய்தி: மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துக்கணக்கை வெளியிட வேண்டுமென்று பிரதமர் மன்மோகன் சிங் மூன்றுமுறை வலியுறுத்திக் கேட்டதன் அடிப்படையில், நேற்று முன்தினம், முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்களில், அழகிரியின் சொத்துக்கள் மலைக்க வைப்பதாக உள்ளன.
டவுட் தனபாலு: இதுக்கே மலைச்சுட்டா எப்படி...? அவர் காட்டியிருக்கிற சொத்துக் கணக்கை படிச்சுப் பாருங்க... அதுல எந்த சொத்தையாவது, அதுல குறிப்பிடப்பட்டிருக்கிற விலைக்கு விற்கத் தயாரா இருக்காங்களான்னு கேளுங்க...!


