மும்பை குண்டு வெடிப்புக்கு உளவுத்துறை தோல்வி காரணமல்ல : சிதம்பரம் பேட்டி
மும்பை குண்டு வெடிப்புக்கு உளவுத்துறை தோல்வி காரணமல்ல : சிதம்பரம் பேட்டி
மும்பை குண்டு வெடிப்புக்கு உளவுத்துறை தோல்வி காரணமல்ல : சிதம்பரம் பேட்டி

மும்பை : ''மும்பை குண்டு வெடிப்பு சம்பவம், உளவுத் துறையின் தோல்வியால் ஏற்பட்டது அல்ல.
மும்பை குண்டு வெடிப்பு குறித்து, அமைச்சர் சிதம்பரம் நேற்று மும்பையில் ஆய்வு செய்தார். மகாரஷ்டிர முதல்வர் சவான் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பின், சிதம்பரம் அளித்த பேட்டி: மும்பை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, இரங்கலை தெரிவிக்கிறேன். இந்த குண்டு வெடிப்பு சம்பவம், உளவுத் துறையின் தோல்வியால் ஏற்பட்டது அல்ல. உளவுத் துறையினர், நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களைப் பற்றியும், எப்போதும் தகவல் திரட்டிக் கொண்டிருக்கின்றனர். தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள், மிகவும் ரகசியமாக திட்டமிடுகின்றனர். மும்பையில் நடந்தது, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்.
இந்த தாக்குதலை, இந்தியாவின் வர்த்தக தலைநகரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருத முடியாது. மூன்று குண்டு வெடிப்புகளுமே, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்டவை. எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இதைக் கருத முடியாது. தாக்குதலுக்கு, இன்னும் எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், தாக்குதலுக்கு காரணமானவர்களை பிடித்து விடுவோம். இந்தியாவுக்கு எதிரான, அனைத்து அமைப்புகள் பற்றியும் தீவிரமாக விசாரிக்கப்படும்.
தாக்குதல் நடத்தப்பட்டதற்கான நோக்கம் என்ன என்பது பற்றியும் விசாரிக்கப்படும். எந்த ஒரு கோணத்தையும் விடப்போவது இல்லை. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடக்கவுள்ள அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். இதை மறுப்பதற்கு இல்லை. இந்த தாக்குதல் பற்றி, முன்கூட்டியே எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு எப்போதெல்லாம், தாக்குதல் பற்றிய தகவல்கள் கிடைக்கிறதோ, அப்போது, மாநில அரசுகளிடம் அதை பகிர்ந்து கொள்வோம்.
பயங்கரவாதத்தின் மையப் புள்ளிகளாகச் செயல்படும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள், நமது அண்டை நாடுகளாக உள்ளன. இது போன்ற சூழ்நிலைக்குள் தான், நாம் வசித்து வருகிறோம். மூன்று குண்டு வெடிப்புகளிலும், 131 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 26 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள், மும்பையில் உள்ள 13 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் <உள்ளவர்களில் 13 பேரின் நிலை, கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடிப்புகளை அடுத்து, மகாராஷ்டிரா தடயவியல் துறையினர் பாராட்டும்படி செயல்பட்டுள்ளனர்; தடயங்களை விரைவாக சேகரித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்கள், பாதுகாப்பாக இருக்கின்றனர். வெளிநாட்டினரையோ, சுற்றுலாப் பயணிகளையோ குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. தாக்குதல் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மும்பை போன்ற பெருநகரங்களில், போலீசாருக்கு மிகச் சிக்கலான பிரச்னைகள் உள்ளன. டில்லி உட்பட, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரங்களுமே, பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகும் நகரங்கள் தான்.
இந்த தாக்குதல் தொடர்பாக, ஒரு அமைப்பிடம் இருந்து இ-மெயில் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த புலனாய்வு அமைப்புகள், ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
குண்டு வைக்கப்பட்டது எங்கே? : உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: இந்த குண்டு வெடிப்புக்கு, அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரிமோட் கன்ட்ரோல் முறையில், குண்டுகள் வெடிக்கச் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், 'டைமர்' பயன்படுத்தப்பட்டுள்ளது. தாதரில், பஸ் நிறுத்தத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், ஒபேரா ஹவுசில், சாலையில் உள்ள கூடை ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஜவேரி பஜாரில், நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் குண்டு வைக்கப்பட்டுள்ளது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒபேரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜாரில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் அதிக திறன் வாய்ந்தவை. தாதரில் வைக்கப்பட்ட குண்டு, குறைந்த திறன் உடையது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
மும்பை மக்களுக்கு பாராட்டு : அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், ''குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பின், மும்பை மக்களின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளன. இந்த சம்பவத்திலிருந்து, அவர்கள் உடனடியாக மீண்டு வந்துள்ளனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர்; மக்கள் தங்களின் வேலைகளை கவனிக்கச் செல்கின்றனர்.
''மும்பை தாஜ் ஓட்டலில் நடந்த தாக்குதலுக்கு பின், இந்தியாவில் இரண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த இரண்டு தாக்குதல்களுமே, துரதிர்ஷ்டவசமாக மகாராஷ்டிராவில் தான் நடந்துள்ளன,'' என்றார்.