பூங்கொத்து, இனிப்புகளுக்கு தடை டி.ஜி.பி., அதிரடி
பூங்கொத்து, இனிப்புகளுக்கு தடை டி.ஜி.பி., அதிரடி
பூங்கொத்து, இனிப்புகளுக்கு தடை டி.ஜி.பி., அதிரடி
ADDED : ஆக 29, 2011 10:43 PM

சென்னை : 'புதிய பதவியில், 'கால் ஆன்' செய்ய வரும்போதோ, பண்டிகைகளை ஒட்டியோ, உயர் அதிகாரிகளை பார்க்க வரும் போலீசார், பூங்கொத்து, இனிப்பு உள்ளிட்டவற்றை வாங்கி வரக் கூடாது; அவற்றை அதிகாரிகள் வாங்கவும் கூடாது' என, டி.ஜி.பி., அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் துறையில், போலீசார் முதல் அதிகாரிகள் வரை, பதவி உயர்வு கிடைத்தாலோ, பணிமாற்றம் செய்யப்பட்டு வேறு இடத்திற்கு சென்றாலோ, அப்பகுதியின் உயர் அதிகாரியை, மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம். அவ்வாறு சந்திக்கும் போது, அந்த அதிகாரிகளுக்கு பிடித்ததை, சிலர் வாங்கிச் செல்வர். சிலர், எலுமிச்சைப் பழம், ஆப்பிள் அல்லது பூங்கொத்தை வாங்கிச் சென்று அதிகாரிகளிடம் கொடுத்து, தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வர். இது, அதிகாரிகளைப் பொறுத்து வேறுபடும். தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட முக்கியமான பண்டிகை தினங்களில், உயர் அதிகாரிகளைப் பார்க்கச் செல்லும் கீழ்நிலை அதிகாரிகள், குறைந்தபட்சம், தங்கள் சக்திக்கேற்ற வகையில், இனிப்பு, பட்டாசு பாக்கெட்களை வாங்கிச் சென்று பார்த்து, வாழ்த்து சொல்லிவிட்டு வருவர். இதுவும், காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. சில போலீஸ் அதிகாரிகளை ஐஸ் வைப்பதற்காகவே, அவர்கள் கீழ் பணியாற்றும் அதிகாரிகள், அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்கித் தருவதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது, ஒருபுறம் அதிகாரிகளுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், சில நேரங்களில் அவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும். இந்நிலையில், சமீபத்தில் காவல் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள டி.ஜி.பி., ராமானுஜம், ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 'உயர் அதிகாரிகளை மரியாதை நிமித்தமாகவோ, பண்டிகை காலங்களிலோ சந்திக்க வரும் கீழ் பணியாற்றுபவர்கள், மலர்க்கொத்து, பழங்கள், பரிசுப் பொருட்கள், சால்வை உள்ளிட்டவற்றை வாங்கி வரக் கூடாது. அப்படியே வாங்கி வந்தாலும், அதை அதிகாரிகள் ஏற்கக் கூடாது' என, அதில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர்-