பெண் வேட்பாளருக்கு கொலை மிரட்டல்:தி.மு.க., முன்னாள் சேர்மன் தலைமறைவு
பெண் வேட்பாளருக்கு கொலை மிரட்டல்:தி.மு.க., முன்னாள் சேர்மன் தலைமறைவு
பெண் வேட்பாளருக்கு கொலை மிரட்டல்:தி.மு.க., முன்னாள் சேர்மன் தலைமறைவு
ADDED : அக் 02, 2011 11:43 PM
திண்டிவனம்:பெண் வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், தி.மு.க., முன்னாள் சேர்மன் உட்பட மூவரை , போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம், பாங்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்,60. தி.மு.க., முன்னாள் ஒன்றியச் செயலராகவும், ஒலக்கூர் ஒன்றிய சேர்மனாகவும் பதவி வகித்துள்ளார். இவரின் மனைவி சீத்தாபதி சொக்கலிங்கம், தற்போதைய ஒன்றிய சேர்மனாக உள்ளார்.
பாங்கொளத்தூர் ஊராட்சித் தலைவராக ராஜமாணிக்கம் என்பவரை, போட்டியின்றித் தேர்வு செய்ய வேண்டுமென, சொக்கலிங்கம் தரப்பினர் ஊர்க் கட்டுப்பாடு விதித்தனர். இதை எதிர்த்து, அதே கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி சபிதா,30, ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.ஆத்திரமடைந்த சொக்கலிங்கம், அவரது ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் மதியம், வேட்பாளர் சபிதாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து, சபிதா கொடுத்த புகாரின்படி, ஒலக்கூர் போலீசார் தி.மு.க., முன்னாள் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், அவரது மகன் செந்தில்குமார்,36, உறவினர்கள் வரதராஜ், அன்பழகன் ஆகிய 4 பேர் மீதும், பொது இடத்தில் அசிங்கமாகத் திட்டுதல், பெண்ணை மானபங்கம் செய்தல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். இவ்வழக்கில், செந்தில்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.இச்சம்பவத்தால், ஒலக்கூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


