Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலத்தில் கட்சி விளம்பரங்கள் "பளிச்'

சேலத்தில் கட்சி விளம்பரங்கள் "பளிச்'

சேலத்தில் கட்சி விளம்பரங்கள் "பளிச்'

சேலத்தில் கட்சி விளம்பரங்கள் "பளிச்'

ADDED : செப் 29, 2011 01:45 AM


Google News
சேலம்: சேலம் மாநகரில் உள்ளாட்சி தேர்தல் விதிமுறைக்கு மாறாக, சுவர் விளம்பரங்கள், கொடி கம்பங்கள், தோரணங்கள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதால், தேர்தல் விதிகள் காற்றில் பறக்கின்றன.தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 21ம் தேதியில் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்து விட்டதாக, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.சட்டசபை தேர்தலின் போது, கட்சி பேனர்கள், கட்-அவுட்கள், கொடி கம்பங்கள் அகற்றுவதில் கடும் தீவிரம் காட்டப்பட்டது. அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில், கட்சி சின்னம் உள்ளிட்ட விளம்பரங்கள் வரைய தடை விதிக்கப்பட்டது.தனியார் சுவர்களில் கூட விளம்பரம் கூடாது என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டது. தவிர, மைதானம், அரங்குகளில் பொதுக்கூட்டம் நடத்த போலீஸாரின் முன் அனுமதி பெறுவதோடு, கட்சி கொடிகள், தோரணங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

அதேபோல, அரசு ஊழியர்களையும், வாகனங்களையும், ஆளும்கட்சியினர் பயன்படுத்த தடை செய்யப்பட்டது. அதே தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள், வரும் உள்ளாட்சி தேர்தலிலும் பின்பற்றப்படுகிறது.ஆனால், சேலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் காற்றில் பறக்கின்றன. சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் சுவரில், மெகா சைஸில், தே.மு.தி.க., வை ஆதரித்து, முரசு சின்னத்துடன் கூடிய விளம்பரம் வரையப்பட்டுள்ளது.அதேபோல, அரசு பொருட்காட்சியில் அரசு சாதனைகள் மற்றும் திட்டங்களை வெளிப்படுத்தும் விளம்பரங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த , செப்., 21ம் தேதியே, சுவர் விளம்பரத்தை அழித்து, சாதனை விளம்பர பலகைகளை உடனடியாக அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளே அதே கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக, பா.ஜ., மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உள்பட எதிர்கட்சியினர் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினர். அதன் பின், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, அவசர அவசரமாக பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரசு சாதனை விளம்பர தட்டிகளை அகற்றினர். அகற்ற முடியாத விளம்பரங்கள் மீது, பேப்பர்கள் ஒட்டி மறைக்கப்பட்டன. மத்திய அரசுக்கு சொந்தமான சுவரில் வரையப்பட்ட தே.மு.தி.க., விளம்பரம் இன்னும் அழிக்கப்படாமலேயே உள்ளது. அதேபோல, சேலம் மாநகரின் பல பகுதிகளில் கட்சி கொடி கம்பங்கள், தோரணங்கள் இன்னும் அப்படியே உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us