/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அ.தி.மு.க., வேட்பாளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லைஅ.தி.மு.க., வேட்பாளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை
அ.தி.மு.க., வேட்பாளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை
அ.தி.மு.க., வேட்பாளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை
அ.தி.மு.க., வேட்பாளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை
ADDED : செப் 28, 2011 11:39 PM
ஓசூர்: ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதனால், இவரது வேட்புமனு நிராகரிக்கப்படுமா அல்லது வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்ப சேர்க்கைக்கான சான்று ஒப்பம் கொடுத்து வேட்பு மனு ஏற்கப்படுமா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாராக ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி போட்டியிடுகிறார். இவர் கடந்த காலத்தில் பாரதிய ஜனதாவில் இருந்தார். ஆறு ஆண்டுக்கு முன், அ.தி.மு.க., வில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்தில் உறுபினர் அட்டை இல்லாமலே இவரது மனைவி ஜோதிக்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற ஜோதிக்கு யூனியன் சேர்மனுக்கு போட்டியிடவும் சீட் வழங்கப்பட்டது. கடும் போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் சுஜாதாவிடம், ஒரு ஓட்டு வித்யாசத்தில் ஜோதி தோல்வியடைந்தார். அதன் பின் முன்னாள் அமைச்சர் தம்பித்துரை தயவால் பாலகிருஷ்ணரெட்டி ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டார். மாவட்டசெயலாளராக முனுசாமி வந்தபின், அணிமாறினார். இந்த உள்ளாட்சி தேர்தலில் கடந்த முறை தவறவிட்ட, ஓசூர் யூனியன் சேர்மன் பதவிக்கு மீண்டும் மனைவியை நிறுத்தி வெற்றி பெற செய்ய பாலகிருஷ்ணரெட்டி காய் நகர்த்தி வந்தார். இந்நிலையில், ஓசூர் நகராட்சியுடன், வருமானம் மிகுந்த முக்கிய ஐந்து பெரிய பஞ்சாயத்துகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதனால், யூனியன் சேர்மன் பதவியை பிடிக்க பாலகிருஷ்ணரெட்டி ஆர்வமில்லாமல், நகராட்சி பதவிக்கு குறி வைத்தார். அதற்கு ஏற்றார்போல் நகர அ.தி.மு.க., வில், தி.மு.க., வுக்கு ஈடுகொடுக்க கூடிய நிர்வாகிகள் இல்லாததால், எப்படியும் ஓசூர் நகராட்சியை கைப்பற்ற அமைச்சரும், மாவட்ட செயலாளருமான முனுசாமி, நகராட்சி வார்டில் வசிக்காத ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணரெட்டியை வேட்பாளராக்கினார். இது நகர நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிட, 26ம் தேதி, அமைச்சர் முனுசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது பாலகிருஷ்ணரெட்டி, ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோவில் எச்.ஐ.ஜி.,132 என்ற வீட்டில் வசிப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அதற்கான எந்த ஆவணத்தையும் வேட்புமனு தாக்கலில் இணைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் உள்ளாட்சி பதவிக்கு போட்டியிடுகிறவர்கள், அந்த உள்ளாட்சி பதவிக்குட்பட்ட எல்லைக்குள் வசிக்க வேண்டும், அப்பகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அ.தி.மு.க., வேட்பாளர் பாலகிருஷ்ணரெட்டி பெயர், நகராட்சியின், 45 வார்டு வாக்காளர் பட்டியலிலும் இல்லை. அவரது சொந்த ஊரான ஜிமங்கலம் வாக்காளர் பட்டியலில் தான் உள்ளது. வரும் 30ம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை நடக்கிறது. செப்டம்பர் 19ம் தேதிக்குள், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய பாலகிருஷ்ணரெட்டி விண்ணப்பம் கொடுத்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சான்று பெற்று தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. பாலகிருஷ்ணன் பெயர், 30ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பில்லாத பட்சத்தில், இவரது பெயரை உடனடியாக வாக்காளர் பட்டிலயில் சேர்க்க அமைச்சர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேட்புமனு பரிசீலனைக்குள், வாக்காளர் பட்டியலில், அ.தி.மு.க., வேட்பாளர் பெயர் இடம்பெறாதப்பட்சத்தில், இவரது வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வேட்புமனு நிராகரிக்கப்படும்பட்சத்தில் மாற்றுவேட்பாளரான நகர செயலாளர் நாராயணனுக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது அமைச்சரின் நெருக்கடியால் வாக்காளர் பட்டியலில் உடனடியாக பெயர் சேர்க்கப்பட்டு பாலகிருஷ்ணன் வேட்புமனு ஏற்கப்படுமா என்ற பரபரப்பு அ.தி.மு.க., வினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க., வேட்பாளர் பாலகிருஷ்ணரெட்டியிடம் கேட்டபோது, ''வாக்காளர் பட்டியலில் பெயரை ஓசூருக்கு இடம் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளேன். கடந்த 19ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம், இடமாற்றம் செய்தவர்கள் தேர்தல் போட்டியிடலாம் என கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார், '' என்றார்.


