Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உழவர் உதவியகங்களுக்கு மூடுவிழாவிளைநிலங்கள் குறைவதால் அவலம்

உழவர் உதவியகங்களுக்கு மூடுவிழாவிளைநிலங்கள் குறைவதால் அவலம்

உழவர் உதவியகங்களுக்கு மூடுவிழாவிளைநிலங்கள் குறைவதால் அவலம்

உழவர் உதவியகங்களுக்கு மூடுவிழாவிளைநிலங்கள் குறைவதால் அவலம்

ADDED : செப் 25, 2011 11:56 PM


Google News
விளைநிலங்கள் படுவேகமாக குறைந்து வருவதால் உழவர் உதவியகங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கும், விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்திலும் மாநிலம் முழுவதும் உழவர் உதவியகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. புதுச்சேரி பகுதியில் 21 உழவர் உதவியகங்களும், காரைக்கால் பகுதியில் 11 உழவர் உதவியகங்களும் செயல்படுகின்றன. மாகி, ஏனாமில் தலா ஒரு உழவர் உதவியகங்கள் அமைந்துள்ளன.உழவர் உதவியகங்களில் வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர், கிராம விரிவாக்கப் பணியாளர், செயல்விளக்க உதவியாளர், டிரைவர், அட்டெண்டர் உள்ளிட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

எந்தெந்த பருவத்திற்கு என்னென்ன ரகங்களை சாகுபடி செய்யலாம், வேளாண் உற்பத்தியை எப்படி பெருக்குவது போன்றவை குறித்து விவசாயிகளுக்கு உழவர் உதவியகங்கள் ஆலோசனை வழங்கி வருகின்றன. மேலும், உரம், பூச்சி மருந்து, விதை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு பெர்மிட் வழங்குவது, விவசாயப் பணிகளுக்கு தேவையான டிராக்டர் போன்றவற்றை குறைந்த வாடகையில் வழங்குவது ஆகிய பணிகளையும் உழவர் உதவியகங்கள் மேற்கொண்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் விளைநிலங்களின் பரப்பளவு வேகமாக குறைந்து வருவதன் எதிரொலியாக பெரும்பாலான உழவர் உதவியகங்கள் காட்சிப் பொருளாக மாறிக் கொண்டுள் ளன. எந்த நோக்கத்திற்காக உழவர் உதவியகங்கள் ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் கைநழுவி சென்று கொண்டுள்ளது. கடந்த 1960ம் ஆண்டுகளில் 32 ஆயிரம் ஹெக்டராக இருந்த விளைநிலங்களின் பரப்பளவு தற்போது வெறும் 14 ஆயிரம் ஹெக்டராக குறைந்து விட்டது. அதாவது, 50 சதவீதத்துக்கு அதிகமான விளைநிலங்கள் 50 ஆண்டுகளில் கபளீகரம் செய்யப்பட்டு விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் விளைநிலங்களே இல்லாத இடங்களிலும் உழவர் உதவியகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுதான். தட்டாஞ்சாவடி, அரியாங்குப்பம், ஒதியம்பட்டு, காரைக்காலில் தலத்தெரு போன்ற உழவர் உதவியகங்கள் அமைந்துள்ள இடங்களில் மிகமிக குறைந்த அளவிலேயே விளைநிலங்கள் உள்ளன.

அதுபோல, தவளக்குப்பம், கன்னியக்கோவில், காலாப்பட்டு போன்ற உழவர் உதவியகங்கள் அமைந்துள்ள இடங்கள், விளைநிலங்களே இல்லாத பொட்டல் காடாக விரைவில் மாறும் நிலைக்கு சென்று கொண்டுள் ளன.வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள கூடப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், தொண்டமாநத்தம், திருக்காஞ்சி போன்ற ஊர்களிலும், திருக்கனூர் மற்றும் சுற்றியுள்ள மதகடிப்பட்டு, அரியூர் போன்ற ஊர்களிலும் விளைநிலங்கள் பிளாட் போட்டு படுவேகமாக விற்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக, புதுச்சேரியின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் பாகூர் பகுதி, ரியல் எஸ்டேட்காரர்களின் சொர்க்கபூமியாகி விட்டது. பச்சை பசேல் என காட்சியளிக்கும் பொன் விளையும் வயல்கள், மறுநாள் காலையில் பார்த்தால் பிளாட்டுகளாக மாறி விடுகின்றன. விளைநிலங்கள் இருந்தால்தான் விவசாயிகள் இருப்பார்கள். விவசாயிகள் இருந்தால்தான் உழவர் உதவியகங்கள் செயல்பட முடியும். அப்போதுதான் இங்குள்ள அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் வேலை இருக்கும்.

இதை உணராமல் விளைநிலங்கள், கூறுபோட்டு விற்கப்படுவதை வேளாண் அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளனர். சுவர் இருந்தால்தால்தான் சித்திரம் வரைய முடியும். விவசாய நிலங்கள் இருந்தால்தான் வேளாண் துறை இருக்கும் என்பதை வேளாண் அதிகாரிகள் உணர்வார்களா...

-நமது சிறப்பு நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us