Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கூடன்குளம் விவகாரம்; போராட்டக்குழுவுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

கூடன்குளம் விவகாரம்; போராட்டக்குழுவுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

கூடன்குளம் விவகாரம்; போராட்டக்குழுவுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

கூடன்குளம் விவகாரம்; போராட்டக்குழுவுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

ADDED : செப் 16, 2011 01:54 AM


Google News

வள்ளியூர் : கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் மூன்று அமைச்சர்கள் நடத்திய இரண்டரை மணிநேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கூடன்குளம் அணுஉலையால் பேராபத்து நிகழும் என்ற பீதியினாலும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒருகட்டமாக இடிந்தகரையில் கடந்த 11ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத பந்தலில் அமர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர். ண்ணாவிரதம் நாளுக்கு நாள் வலுவடைந்து ஆதரவு பெருகி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு போராட்டக்காரர்களை அழைத்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் உண்ணாவிரத பந்தலிலேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலையில் தமிழக அமைச்சர்கள் செந்தூர்பாண்டியன், சண்முகநாதன், செல்லப்பாண்டியன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ராதாபுரத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் மாலை 4.30 மணியளவில் பேச்சுவார்த்தை துவங்கியது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் செந்தூர்பாண்டியன், சண்முகநாதன், செல்லப்பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், பி.ஜி.ராஜேந்திரன், நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) வரதராஜூ, எஸ்பி விஜயேந்திரபிதரி, சேரை., ஆர்டிஓ கருணாகரன் ஆகியோரும் போராட்டக்குழு சார்பில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ், ராதாபுரம் தேமுதிக எம்.எல்.ஏ.,மைக்கேல் ராயப்பன், பங்கு தந்தைகள் ஜெயக்குமார், சுஸ்லான், மைப்பா ஜேசுராஜ், ததேயூஸ், அணுமின் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஆண்டன்கோமஸ், உதயகுமார், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் சிவசுப்பிரமணியன், புஷ்பராயன், உவரி அந்தோணி, லிட்வின், நாதன், ஜெரால்டு, குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டுமென்றும், அதற்கு தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும் ஒருமித்த கருத்தாக வலியுறுத்தினர். அதற்கு அமைச்சர்கள், தங்களின் கருத்துக்களை தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறுகிறோம். அதனால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும், நல்லதொரு முடிவை முதல்வர் அறிவிப்பார் என்றும் எடுத்துக் கூறினர். அதற்கு போராட்டக்காரர்கள் மறுத்து வந்தனர். இருந்தபோதிலும் அமைச்சர்களும் தனி அறைக்கு சென்று முக்கிய ஆலோசனைகள் நடத்தினர். பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்குழு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்களை தமிழக முதல்வரிடம் பேசுவதற்கு அழைத்துச் செல்கிறோம். அதற்கு முன் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தினர். நாளை (இன்று) உங்களை தமிழக முதல்வரிடம் அழைத்து செல்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு போராட்டக்காரர்கள் தினசரி நடத்தும் போராட்டத்தை நிறுத்திவிட்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை நடத்துகிறோம் என்று கூறினார்கள். எல்லா போராட்டங்களையும் நிறுத்திவிட்டு வந்தால் தமிழக முதல்வரிடம் பேசலாம் என்று கூறினர். அதற்கு போராட்டகாரர்கள் சம்மதித்த வேளையில் திடீரென்று அமைச்சர்கள் அவர்களிடம் கால அவகாசம் கேட்டனர். இதனால் அதிருப்தியடைந்த போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் சுமார் இரண்டரை மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் கேட்டபோது, ''கூடன்குளம் அணுமின் நிலைய பிரச்னை குறித்து நடந்த பேச்சுவார்த்தை முடிவுகளை அரசிடம் தெரிவித்து இன்னும் மூன்று நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும்'' என்றார். பேச்சுவார்த்தை குறித்து போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் கூறும்போது, ''மக்களின் உணர்வுகளை அரசுக்கு தெரிவித்தோம். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைப்பதில்லை. அதன்படி தமிழக முதல்வரை பார்க்க அமைச்சர்கள் அனுமதி வாங்கி தருகிறோம், அதற்கு முன் உண்ணாவிரத போராட்டங்களை கைவிட்டுவிட்டு வரும்படி கேட்டுக் கொண்டனர். நாங்கள் மக்களின் உணர்வுகளை மதித்து மக்களிடம் கலந்து ஆலோசித்து கூறுகிறோம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம். அதனால் எங்களுக்குள் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. எங்களின் கோரிக்கையான அணுமின்நிலையம் மூடவேண்டுமென்பதில் அரசு உடன்படவில்லை. அதனால் எங்களின் போராட்டம் தொடரும். உண்ணாவிரத போராட்டத்தை தமிழகத்தில் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று அகிம்சை வழியில் நடத்த முடிவு செய்துள்ளோம். பொறுமையாக இருந்தால் விடிவு கிடைக்கும். அணுமின் நிலையத்தை கூடன்குளத்தில் வரவே விடமாட்டோம். அதற்காக எங்களின் உயிர்களை விடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்று கூறினார். இதன்படி இன்று (16ம் தேதி) 6வது நாளாகவும் உண்ணாவிரதம் தொடரும் என உண்ணாவிரத பந்தலில் அறிவிக்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us